குப்பிளான் செம்புலத்துக்கு விஜயம் செய்த இயற்கை வழி இயக்க செயற்பாட்டாளர்கள்

ஆசிரியர் - Admin
குப்பிளான் செம்புலத்துக்கு விஜயம் செய்த இயற்கை வழி இயக்க செயற்பாட்டாளர்கள்

இயற்கை வழி இயக்க செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து இன்று மதியம் 2.30 மணியளவில் குப்பிழானில் அமைந்துள்ள செம்புலம் இயற்கைவழி உலருணவு உற்பத்தி நிலையத்துக்கும் பண்ணைக்கும் விஜயம் செய்திருந்தனர். மாலை 5.30 மணிவரை தொடர்ந்த சந்திப்பில் பல்வேறு விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.

எமது பிரதேசத்தில் இயற்கையாகவே வளரும் தன்மையுடையதும் அதிக போசனைப் பெறுமானம் உடையதுமான சுண்டங் கத்தரி பயிர்ச்செய்கை முறையையும் குறித்த குழுவினர் நேரடியாக அறிந்து கொண்டனர்.

செம்புலத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இயற்கை வழி இயக்கத்தின் அடுத்த கட்ட செயற்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.

புதுவருடத்தை ஒட்டி இயற்கைவழி உணவுப் பொருட்கள் சார்ந்த விற்பனைக் கண்காட்சியினை நடாத்துவது குறித்தும், பாடசாலைகளில் மாணவர்களிடையே வேளாண் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடாத்துவது தொடர்பிலும், வீட்டுத் தோட்டங்கள் செய்ய ஊக்குவிப்பது குறித்தும், குறிப்பாக கீரை வகைகளை உற்பத்தி செய்வதில் அதிக அக்கறை செலுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. 

யாழ் மாவட்டத்தில் 10 இல் 7 பெண்களுக்கு இரும்புச் சத்துக் குறைபாடு உள்ளமை ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் போதியளவு பச்சை இலை வகைகள், கீரை வகைகள் சாப்பிடாமையே ஆகும்.

மேலும், எண்ணிம நூலகம் ஒன்றினை உருவாக்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இயற்கை வழி இயக்கத்தினர் வெறுமனே வேளாண்மை வளர்ப்பு மற்றும் கால்நடை வளர்ப்புடன் மாத்திரம் நின்று விடாமல் தேனீ வளர்ப்பு, நீரியல் உயிர்வளப்பு போன்றவற்றிலும் ஈடுபட வேண்டும் எனவும்,

பாரம்பரிய உணவு வகைகளை மீட்டெடுத்து அதனுடைய மரபு சார்ந்த தரம் குன்றாமல் சமைத்து வழங்கக் கூடியவர்களை கண்டுபிடித்து உணவுத் திருவிழாக்களை நடாத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டன. இவற்றையெல்லாம் செயற்படுத்தும் வகையில் செயற்பாட்டுக் குழுக்களும் உருவாக்கப்பட்டன.

இயற்கை ஆர்வலர்களின் முதலாவது பண்ணை விஜயம் வல்வெட்டித்துறை ஊரிக்காட்டில் உள்ள வி.எஸ்.பி பண்ணைக்கும், இரண்டாவது விஜயம் மாவிட்டபுரத்தில் அமைந்துள்ள சசி அவர்களின் பண்ணைக்கும், மூன்றாவதாக குப்பிழானில் உள்ள செம்புலத்திலும் சந்திப்பும், கலந்துரையாடலும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இயற்கை வழி இயக்க ஆர்வலர்களின் பங்களிப்பு ஆரம்பத்தில் சராசரியாக 25 வரையில் இருந்தது. இன்றைய செம்புலச் சந்திப்பில் சுமார் 40 பேருக்கும் அதிகமானோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

செம்புலம் உற்பத்திகளின் உரிமையாளரான V.G மூர்த்தி (ரகு), அங்கே பாவற்காய், மோர் மிளகாய், வடகம் போன்ற உலருணவுகளை போசனைகள் இழக்காமல் உற்பத்தி செய்து வருகிறார். சுண்டங் கத்தரி, வாழை போன்ற பயிர்களையும் குறிப்பிடத்தக்க அளவில் பயிர் செய்து வருகிறார்.

இப்படியான களப் பயணங்கள் ஊடாக புதிய புதிய அனுபவங்களை பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்ததாகவும், நேரடியான விளக்கங்களைப் பெறக் கூடியதாக இருந்ததாகவும் பங்கேற்றவர்கள் மகிழ்ச்சியுடன் கூறினர். 

செம்புலம் தொடர்புகளுக்கு: 077 228 1820

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு