அட்டாளைச்சேனை, பொத்துவில் பகுதியில் 9 பேருக்கு கொரோனா-மக்கள் விழிப்பாக இருக்குமாறு வைத்திய கலாநிதி ஜி.சுகுணன் தெரிவிப்பு
அம்பாறை மாவட்டத்தில் 9 பேருக்குக் கொரோனாத் தொற்று இனங்காணப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் ஜீ.சுகுணன் தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பொத்துவில் பகுதியில் இன்று(23)கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின்படி அட்டாளைச்சேனை பகுதியல் 7 பேரும் பொத்துவில் பகுதியில் 2 பேரும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
குறிவித்த விடயம் தொடர்பில் ஊடகவியலாளர் இன்று(23) வினவிய கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தெரிவித்ததாவது
தற்போது அம்பாறை மாவட்ட நிலைமை கருதி சுகாதாரப் பிரிவினரும் பொலிஸாரும் ஒன்றிணைந்து பல்வேறுபட்ட தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்தும் பிரதேசத்தில் முன்னெடுத்து வருகின்றனர்.
அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேரும் பொத்துவில் பகுதியில் சிறையில் இருந்து வெளிவந்த இரு கைதிகளுக்கும் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின்படி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது சுகாதார நடைமுறையுடன் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாப்பு பெறுவது தொடர்பிலான அறிவுறுத்தலை பொதுமக்கள் பின்பற்றுவது மிக அவசியமாகும்.எதிர்வரும் காலங்களில் பொதுமக்கள் சுகாதார தரப்பினருக்கு ஒத்துழைப்புகளை தர முன்வர வேண்டும்.கொவிட் 19 அச்சுறுத்தல் தொடர்ந்து எமது நாட்டில் காணப்படுவதனால் சுகாதார நடைமுறைகளை ஒவ்வொரு பொதுமகனும் பின்பற்றுவது அவசியமாகும்.எனவே கொவிட் 19 அச்சுறுத்தலில் இருந்து எவ்வாறு எமது பாதுகாப்பை நாம் முன்னெடுப்பது என அனைவரும் ஆராய வேண்டும் என குறிப்பிட்டார்