சீனத் தூதுவரை குறிவைத்து தற்கொலை குண்டுத் தாக்குதல்!! -பாகிஸ்தான் நட்சத்திர ஹோட்டலில் சம்பவம்: நால்வர் பலி-

பாகிஸ்தான் - பலூசிஸ்தான் மாகாண தலைநகரான குவெட்டா நகரில் உள்ள செரீனா ஹோட்டலில் நேற்று தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை கார்க்குண்டுத் தாக்குதலில் பொலிஸார் ஒருவர் உட்பட 4 பேர் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானுக்கான சீனத் தூதுவரை குறிவைத்து இந்தக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
சீனத் தூதுவர் நோங் ரோங் நேற்றிரவு இந்த விடுதியில் இரவு உணவு நேரச் சந்திப்பொன்றை நடத்தியுள்ளார். இந்தச் சந்திப்பு முடிந்து அவர் வெளியேறிய சில நிமிடங்களில் நட்சத்திர விடுதியின் வாகனத் தரிப்பிடத்தில் குண்டு வெடிக்கச் செய்யப்பட்டது.
பாகிஸ்தானுக்கான சீனாவின் தூதர் இந்த விடுதியில் தங்கியிருந்தார். ஆனால் குண்டு வெடித்தபோது அங்கு இல்லை என்று பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் உறுதிப்படுத்தினார்.
இந்தத் தாக்குதலுக்கு தலிபான்கள் உரிமை கோரியுள்ளனர். எங்களது தற்கொலை குண்டுதாரிகளே இந்தத் தாக்குதலை நடத்தினர் என தலிபான் அமைப்பின் செய்தித் தொடர்பாடல் தகவல் வெளியிட்டுள்ளார்.
தாக்குதல் நடத்தப்பட்ட நட்சத்திர ஹோட்டல் அதியுயர் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் நிறைந்த பகுதியில் அமைந்துள்ளது. மேலும் அதன் அருகில் ஈரானிய துணைத் தூதரகம் மற்றும் பலூசிஸ்தான் மாகாண ஆளுநரின் இல்லம் என்பனவும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.