இந்தியாவில் ஒட்சிசன் தட்டுப்பாட்டால் நோயாளர்களுக்கு உயிராபத்து!! -உடன் விநியோகிக்குமாறு நீதிமன்று அதிரடி உத்தரவு-

ஆசிரியர் - Editor II
இந்தியாவில் ஒட்சிசன் தட்டுப்பாட்டால் நோயாளர்களுக்கு உயிராபத்து!! -உடன் விநியோகிக்குமாறு நீதிமன்று அதிரடி உத்தரவு-

இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில் அவசர நோயாளிகளின் உயர்காக்கும் ஒட்சிசனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் நூற்றுக்கணக்கான நோயாளிகளின் உயிர் பறிபோகும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்த தட்டுப்பாட்டை சமாளிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஏன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை? என டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

என்ன செய்தேனும் ஒட்சிசன் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய உயிர்களைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அத்துடன், ஒட்சிசன் சிலிண்டர்களை பயன்படுத்தி தயாரிப்பு பணிகளை மேற்கொள்ளும் இரும்பாலை உற்பத்தி நிறுவனங்கள் உடனடியாக அந்த சிலிண்டர்களை தொழிற்சாலை தேவைக்காக பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று நீதிபதிகள் கட்டளையிட்டனர்.

டெல்லியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் தீவிர சுவாச நோயுடன் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு தேவையான ஒட்சிசன் சிலிண்டர்களுக்கு நிலவும் தட்டுப்பாட்டை சமாளிக்க உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று புதன்கிழமை மாலை அவசர வழக்காக விசாரிக்கப்பட்டது.

நேற்று இரவு 9.20 வரை நடந்த விசாரணை முடிவில் தடையின்றி ஒட்சிசன் சிலிண்டர்களை வைத்தியசாலைகளுக்கு விநியோகம் செய்ய மத்திய அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து வைத்தியசாலைகளுக்கு தேவைப்படும் ஒட்சிசன் சிலிண்டர்களை வழங்க உடனடியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை இன்று வியாழக்கிழமை பிற்பகல் 3 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.