நாடு முழுவதும் அதியுச்ச பாதுகாப்பு..! தயாராகும், இராணுவம் மற்றும் பொலிஸார், பொலிஸ் பேச்சாளர் நாட்டு மக்களுக்கு வழங்கியுள்ள தகவல்..
உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலின் 2ம் ஆண்டு நிறைவு நாளில் படுகொலை செய்யப்பட்டவர்கள் நினைவாக நடைபெறும் நினைவேந்தல்கள், ஆராதனைகளுக்கு உச்ச பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, உயிர்த்த ஞாயிறுதின குண்டுதாக்குதல் இடம்பெற்று நாளைமறுதினம் புதன்கிழமையுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியடைகின்றது. இந்நிலையில் தாக்குதலின் போது உயிரிழந்தோரை நினைவு கூறும் வகையில்
கத்தோலிக்க தேவாலயங்களில் விசேட ஆராதனை நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. நாடளாவிய ரீதியில் நாளைமாலை முதல் நாளைமறுதினம் பிற்பகல் வரை இடம்பெறவுள்ள இந்த ஆராதனை நிகழ்வுகளுக்கு முழுமையான பாதுகாப்பை வழங்குவதற்கு பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்கள், பிரதி பொலிஸ்மா அதிபர்கள், பிரதேசங்களுக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் ஆகியோருக்கு பொலிஸ் தலைமையகம் ஆலோசனையும் வழங்கியுள்ளது.
அதற்கமைய, இவ்வாறு விசேட ஆராதனைகள் இடம்பெறவுள்ள தேவாலயங்களின் அருட்தந்தைகள் மற்றும் மதத்தலைவர்களுடன் கலந்துரையாடி, அங்கு இடம்பெறவுள்ள நிகழ்வுக்கு ஏற்றவகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பிரதேச மேற்பார்வை அதிகாரிகள்
மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்போது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளினால் முன்னெடுக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் சிரேஷ்ட அதிகாரிகள் நேரடியாக கண்காணிப்பர்.