சிப்பி ஆற்றுபகுதியில் பொலிஸார், கடற்படை அதிரடி..! ஒரு கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா மீட்பு, 3 பேர் சிக்கினர்..
மன்னார் - இலுப்பைக்கடவை சிப்பி ஆற்றுப்பகுதியில் கேரள கஞ்சா பொதிகளுடன் 3 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
டிப்பர் ஒன்றில் மறைத்து எடுத்துவரப்பட்ட நிலையில் குறித்த மன்னார் பொலிஸ் நிலைய ஊழல் தடுப்பு பிரிவினர் இன்று காலை கஞ்சாவை மீட்டுள்ளனர்.
கடற்படை புலனாய்வு தகவலுக்கு அமைவாகவே கஞ்சா மீட்கப்பட்டிருக்கின்றது. மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் கஸ்தூரி ஆராச்சியின் பணிப்பில்,
மன்னார் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜெயதிலக, உப பொலிஸ் பரிசோதகர் திலங்க தலைமையிலான குழுவினரே இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
இதன்போது, 89 கிலோ மற்றும் 355 கிராம் நிறையுடைய இலங்கை மதிப்பில் கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சா பொதிகளே கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை, கஞ்சா கடத்தலுக்காகப் பயன்படுத்தப்பட்ட டிப்பர் வாகனம் பொலிஸாரால் கையகப்படுத்தப்பட்டுள்ளதுடன் மூன்று சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் வவுனியாவைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் இருவர் கூமாங்குளம் பகுதியையும் மற்றையவர் தவசிகுளம் பகுதியையும் சேர்ந்த
25, 44 மற்றும் 31 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.