நிரந்தர நியமனம் தொடர்பில் தொண்டராசிரியர்கள் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் விஷேட சந்திப்பு!
தமது நியமனங்களை உறுதிசெய்து தருமாறு கோரி தொண்டராசிரியர்கள் ஒரு தொகுதியினர் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொழும்பில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின்போதே தொண்டராசிரியர்கள் செயலாளர் நாயகத்திடம் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த ஆண்டு நடைபெற்ற தொண்டராசிரியர் நிரந்தரமாக்கலுக்கான நேர்முகத்தேர்வில் ஆவணங்கள் ரீதியாக உள்வாங்கப்பட்ட 182 தொண்டராசிரியர்களை நிரந்தரமாக்குவதற்கு தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதனால் தாமும் குறித்த நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றிருந்தும் கடந்த யுத்த அனர்த்தங்கள் காரணமாக தங்களால் சில ஆவணங்களை சமர்ப்பிக்க முடியாது போனதால் தாங்கள் குறித்த நிரந்தரமாக்கலில் தெரிவு செய்யப்படவில்லை என்று தெரிவித்த அவர்கள்,
நீண்டகாலமாக ஊதியங்களைக் கூட எதிர்பாராது தாம் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபட்டதாகவும் குறித்த தொழிலையே தமது எதிர்காலமாக நம்பியிருப்பதாகவும் தற்போது தமக்கு வயது அதிகரித்து சென்றுள்ள நிலையில் குறித்த நியமனம் கிடைக்காது போனால் தமது குடும்பநிலை பாதிக்கப்படும் என்றும் தெரிவித்த அவர்கள் தமக்கும் குறித்த 182 தொண்டராசிரியர்களுடன் சேர்த்து நிரந்தர நியமனங்களை வழங்க ஏற்பாடுகள் செய்துதர வேண்டும் என்றும் இது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் மட்டுமே இயலுமான காரியம் என்றும் தெரிவித்துள்ளனர்.
குறித்த தொண்டராசிரியர்களது கோரிக்கைகளை செவிமடுத்த செயலாளர் நாயகம் கல்வி அமைச்சின் செயலாளருடன் தொடர்பை ஏற்படுத்தி தொண்டராசிரியர்களுடன் உரையாடலை மேற்கொண்டு காலக்கிரமத்தில் குறித்த தொண்டராசிரியர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுக்கொடுக்க ஏற்பாடுகள் செய்வதாக தெரிவித்திருந்தார்.