நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு!! -தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள அவருக்கு எக்மோ கருவியின் உதவியுடன் சிகிச்சை-
நகைச்சுவை நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் சிகிச்சைக்காக சென்னை வடபழனியில் தனியார் வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு எக்மோ கருவியின் உதவியுடன் சிகிச்சை கொடுக்கப்பட்டு வருவதாக வைத்தியசாலையில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக மக்களின் மனம் கவர்ந்த விவேக் நகைச்சுவை நடிகர் என்பதைத் தாண்டி, சமூக ஆர்வலராகவும், மரம் வளர்ப்பு, கொரோனா தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் பரவலாக கவனம் பெற்று வருபவர்.
இவர் தமது சாலிக்கிராமம் வீட்டிலிருந்தபோது, இன்று வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில் அவரின் மகளால் உடனடியாக வடபழனி சிம்ஸ் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மருத்துவர்கள் அதற்கான முதல் கட்ட சிகிச்சைகளை கொடுத்தனர். இதயத்திற்கு செல்லும் ரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டது பரிசோதனையில் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, ரத்த குழாயில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்ய ஸ்டெண்ட் வைக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரத்த ஓட்டத்தை இயக்கும் இதயம்-நுரையீரலின் செயல்பாடுகள் பலவீனமாக இருப்பதால், எக்மோ எனப்படும் வெளிப்புறக் கருவி மூலம், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் விவேக்கின் உடல்நிலை குறித்து வைத்தியசாலை இன்று வெள்ளிக்கிழமை மாலை அறிக்கை வெளியிடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதில் விவேக்கிற்கு ஏற்பட்ட பாதிப்பு, சிகிச்சை முறைகள் குறித்த விவரங்கள் முழுமையாக வெளியாகும்.