தடுப்பூசி போட்ட ஒவ்வாமையால் முகம் சிவந்துவிட்டது!! -நடிகர் பார்த்திபன் தகவல்-
இந்தியாவில் அரசியல் தலைவர்கள், நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்களும் பொதுமக்களும் தாமாகவே முன்வந்து தடுப்பூசியை செலுத்திக் கொள்ளுகின்றார்கள்.
இந்த நிலையில் அனைவரும் தவறாது ஓட்டு போட வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த நடிகர் பார்த்திபன் நடந்து முடிந்த தேர்தலில் வாக்களிக்கச் செல்லவில்லை.
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட தனக்கு ஒவ்வாமை ஏற்பட்டதால் வாக்களிக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டுவிட்டரில் பார்த்திபன் வெளியிட்டுள்ள பதிவில்:- இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட எனக்கு திடீரென ஒவ்வாமையில் கண், காது, முகம் சிவந்து விட்டது.
வைத்தியர்களுக்கு புகைப்படத்தை அனுப்பி மருத்துவம் செய்து கொண்டேன். தடுப்பூசி அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். மிக சிலருக்கு மட்டுமே இது போன்ற பிரச்சினை. அதுவும் எனக்கு ஏற்கனவே ஒவ்வாமை இருந்ததால் மட்டுமே இப்படி ஆனது என்று கூறியுள்ளார்.