SuperTopAds

மாநகர சபை வாகனங்களை சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதை தடுக்க ஜிபிஸ் தொழிநுட்பம் பொருத்த நடவடிக்கை

ஆசிரியர் - Editor III
மாநகர சபை வாகனங்களை சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதை தடுக்க ஜிபிஸ் தொழிநுட்பம் பொருத்த நடவடிக்கை

மாநகர சபை வாகனங்களை  சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதை தடுக்க ஜிபிஸ் தொழிநுட்பம் பொருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப்  தெரிவித்தார்.

 கல்முனை மாநகர சபையின் 36 ஆவது  மாதாந்த பொதுச் சபை அமர்வு செவ்வாய்க்கிழமை(30 ) 2.30 மணியளவில்  மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப்  தலைமையில் நடைபெற்றபோது  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சபை ஆரம்ப நிகழ்வாக சமய ஆராதனையுடன் கடந்த   24.02.2021 அன்று இடம்பெற்ற கூட்டறிக்கையை அங்கீகரித்தல் தொடர்பாக ஆராயப்பட்டதுடன் முதல்வரின் உரை இடம்பெற்றது.

மேலும் நிலையியற்குழுக்கூட்டத் தீர்மானங்கள் அங்கீகரித்தல் தொடர்பில்  ஆராய பட்டதுடன்  இதன்  பொறுப்பு அனைவரிடமும் உள்ளதாக முதல்வரால்  சுட்டிக்காட்டி  ஆராயப்பட்டது.

தொடர்ந்து  மாநகர சபை வாகனங்கள் சட்டவிரோதமான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுவதாகவும் உரிய அனுமதி இன்றி தனியாருக்கு வாடகை அடிப்படையில் பயன்படுத்தப்படுவதை  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனை  மாநகர சபை உறுப்பினர் சி.எம்.முபீத் சுட்டிக்காட்டி   உரையாற்றியதுடன்  இவ்விடயம் தொடர்பில்  ஏனைய  உறுப்பினர்களும்  கருத்துக்களை முன்வைத்தனர்.

இதனை தொடர்ந்து பதிலளித்த முதல்வர் மாநகர சபை வாகனங்களை  சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதை தடுக்க ஜிபிஸ் தொழிநுட்பம் பொருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன் முறைகேடாக  பயன்படுத்தப்பட்டுள்ளதாக உறுப்பினர்கள் தெரிவித்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க ஐவர் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டு  அதன் அறிக்கை கிடைத்ததுடன்  உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டார்.

 அத்துடன் இதனை தொடர்ந்து ஏனைய  மாநகர சபை உறுப்பினர்களின் ஒழுங்கு பிரச்சினை மற்றும் முறையீடுகளிற்கான பதிலுடன் சபை அமர்வு நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.