பாரம்பரிய உணவுப் பழக்கங்களை அடுத்த தலைமுறையினருக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்
பாரம்பரிய உணவுப் பழக்கங்களை அடுத்த தலைமுறையினருக்கு கற்றுக்கொடுக்க வேண்டுமென அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களம், நாவிதன்வெளி பிரதேச செயலகம் மற்றும் மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலையம் ஆகிய இணைந்து ஏற்பாடு செய்த உற்பத்திக் கண்காட்சி, நாவிதன்வெளி கலாசார மத்திய நிலையத்தில், பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் இன்று (30) நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், “பெண்கள் தமது சுயதொழில் முயற்சிகள் ஊடாக பிரதேசத்திலும் மாவட்டத்திலும் எமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பாரியளவில் பங்களிப்புச் செய்து வருகின்றார்கள்.
“உற்பத்திகள் மேற்கொள்ளப்படுகின்ற போது முதலீடுகள், இலாபம் மற்றும் சந்தைப்படுத்தல் போன்ற விடயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியமானதாகும். அத்தோடு, சமூகத்துக்கும் அடுத்த பரம்பரைக்கும் புதிய சிந்தனைகளை கொண்டு செல்ல வேண்டும்.
“பாரம்பரிய உணவு முறைகளைக் கடைபிடிக்க வேண்டும். அடுத்த தலைமுறையினருக்கு பாரம்பரிய உணவுப் பண்டங்களை உற்பத்தி செய்கின்ற முறைகள் தொடர்பாக அறிவுறுத்தப்பட வேண்டும். எனவே, எமது வீடுகளில் நடைபெறும் முக்கியமான நிகழ்வுகளின் போது, நாம் எமது கலாசார உணவு முறைகளை உற்பத்தி செய்யப் பழகிக்கொள்ள வேண்டும்” என்றார்