மியான்மர் இராணுவத்தின் செயல் மிகக் கொடூரமானது!! -ஜோ பைடன் கடும் கண்டனம்-
மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக போராடும் மக்கள் சுட்டுக் கொல்லப்படும் சம்பவத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
அந்நாட்டு இராணுவ ஆட்சிக்கு எதிராக அந்நாட்டு மக்கள் கடந்த பெப்ரவரி மாதம் 2 ஆவது வாரத்திலிருந்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
போராட்டங்களை ஒடுக்க இராணுவம் துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட கொடூரமான அடக்கு முறைகளைக் கையாண்டு வருகிறது.
அந்நாட்டு இராணுவம் நேற்று முன்தினம் சனிக்கிழமை ஆயுதப்படை தினத்தை கொண்டாடியது. இத்தினம் தொடர்பில் அரசு தொலைக்காட்சியில் உரையாற்றிய இராணுவ தளபதி மின் ஆங் ஹேலிங் இராணுவ ஆட்சிக்கு எதிராக போராடுபவர்கள் தலையில் சுட படுவார்கள் என்றும் பகிரங்க அச்சுறுத்தல் விடுத்தார்.
இந்த அச்சுறுத்லையும் மீறி அன்று அந்த நாட்டின் 2 மிகப் பெரிய நகரங்களான யாங்கூன், மாண்டலே உட்பட 40 இடங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வழக்கம் போல் வீதிகளில் இறங்கிப் போராடினர்.
இந்த போராட்டங்களில் திடீரென வன்முறை வெடித்தது. பல இடங்களில் தீ வைப்பு சம்பவங்களும் நடைபெற்றன. இதையடுத்து இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது.
இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இராணுவத்தினர் போராட்டக்காரர்களை குருவியை சுடுவதுபோல் சுட்டுத் தள்ளினர். இதனால் ஒரே நாளில் 114 பேர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் மியான்மர் இராணுவத்தின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெலாவேர் மாகாணத்தில் செய்தியாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறுகையில்:-
மியான்மர் இராணுவத்தின் செயல் முற்றிலும் மூர்க்கத்தனமானது. மிகவும் மோசமானது. எனக்கு கிடைத்த அறிக்கையின் அடிப்படையில், ஏராளமான மக்கள் முற்றிலும் தேவையில்லாமல் கொல்லப்பட்டுள்ளனர் என்றார்.