SuperTopAds

தேவையற்ற பதற்றத்தை உண்டாக்காதீர்கள்..! தொல்லியல் திணைக்களத்தினருக்கு அங்கஜன் சுட்டிக்காட்டு, நிலாவரை அகழ்வு பணிகள் நிறுத்தப்பட்டது..

ஆசிரியர் - Editor I
தேவையற்ற பதற்றத்தை உண்டாக்காதீர்கள்..! தொல்லியல் திணைக்களத்தினருக்கு அங்கஜன் சுட்டிக்காட்டு, நிலாவரை அகழ்வு பணிகள் நிறுத்தப்பட்டது..

யாழ்.புத்துார் - நிலாவரை கிணற்றை அண்மித்த சூழலில் இன்று காலை தொடக்கம் தொல்லியல் திணைக்களத்தினர் மேற்கொண்டிருந்த அகழ்வு பணிகள் யாழ்.மாவட்ட அபிவிருத்தி குழு இணை தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தலையீட்டையடுத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கின்றது. 

நிலாவரை கிணற்றை அண்மித்த பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினர் கடந்த மாதம் அகழ்வு பணிகளை மேற்கொண்டிருந்த நிலையில் பொதுமக்களின் எதிர்ப்பை தொடர்ந்து அகழ்வு பணிகள் நிறுத்தப்பட்டிருந்தது. இவ்வாறான நிலையில் இன்று காலை மீளவும் அந்த பகுதியில் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. 

இதனை தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் வலி,கிழக்கு பிரதேசசபை தவிசாளர் ஆகியோர் தலையிட்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்திய நிலையில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தவிசாளர் மீது தொல்லியல் திணைக்களம் முறைப்பாடு பதிவு செய்திருக்கின்றது. 

இந்நிலையில் குறித்த விடயம் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை தொடர்ந்து உடனடியாக தொல்லியல் திணைக்கள அதிகாரிகளுடன் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் யாழ்.மாவட்டத்தில் தொல்லியல் ஆய்வு பணிகள் மேற்கொள்ளவுள்ள இடங்கள் தொடர்பான தகவல்களை எமக்கு தொியப்படுத்துங்கள். 

அவ்வாறான ஆய்வுகள் செய்யப்படுவதன் நோக்கத்தை தெளிவுபடுத்துங்கள். அதனை நாங்கள் அபிவிருத்தி குழுவின் கவனத்திற்கு கொண்டு சென்று அங்கு சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் பேசி சுமுகமான தீர்மானம் ஒன்றை எடுக்கமுடியும். அதனை விடுத்த தேவையற்ற பதற்றத்தை உருவாக்கவேண்டாம். என சுட்டிக்காட்டியிருந்தார். 

இதனையடுத்து அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.