பரசூட் பயிற்சியின் போது விபத்து-சம்பவம் தொடர்பில் விசாரணைக்கு குழு
இலங்கை விமானப் படையின் அம்பாறை உகன முகாமில் பயிற்சியின்போது இரு பரஷூட்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் விமானப்படை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றொரு வீரர் காயமடைந்துள்ள சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக விசேட விசாரணைக்கு குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
இன்று (20) சனிக்கிழமை காலை 7.30 – 7.45 க்கு இடைப்பட்ட நேரத்தில் 40 – 70 அடி உயரத்தில் காற்றின் திசை மாற்றமடைந்ததால் இரு பரஷூட்டுக்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக விமானப்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
விபத்துக்குள்ளான குறித்த விமானப்படையினர் இருவரும் அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதன்போது கண்டி மாவட்டம் கடுகஸ்தோட்டை பொல்கொல்லை பகுதியை சேர்ந்த மனோஜ் பத்மதிலக(வயது-34) என்ற அதிகாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அம்பாறை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் 32626 என்ற இலக்கத்தையுடைய அபேகோன் பீ.எச்.கே.சீ. என்ற் சிப்பாய் அம்பாறை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிசிச்சை பெற்று வருகின்றார்.
மேலும் இவர்களிருவரும் இலங்கை விமானப்படையின் வன்னி முகாமில் சேவையாற்றுவதோடு பரஷூட் பயிற்சிக்காக கடந்த 11 ஆம் திகதி அம்பாறை முகாமுக்கு வருகை தந்துள்ளனர்.விபத்தில் உயிரிழந்த விமானப்படை அதிகாரி பரஷூட் பயிற்சியில் சிறந்த தேர்ச்சி பெற்றவராவார். இவர் திருமணமானவர்.
குறித்த அதிகாரி 2008 செப்டெம்பர் 28 ஆம் திகதி கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் இலக்கம் 26 ஆட்சேர்ப்பின் கீழ் கெடட் அதிகாரியாக இலங்கை விமானப்படையில் இணைந்து கொண்டார்.விமானப்படை தளபதி எயா மார்ஷல் சுதர்ஷன பத்திரனவினால் இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக விசேட விசாரணைக்கு குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.