SuperTopAds

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முன்வைத்த பிரச்சினைக்கு ஒரு மாதத்தில் தீர்வு..! ஜனாதிபதி, பிரதமருடன் விரைவில் பேச்சு..

ஆசிரியர் - Editor I
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முன்வைத்த பிரச்சினைக்கு ஒரு மாதத்தில் தீர்வு..! ஜனாதிபதி, பிரதமருடன் விரைவில் பேச்சு..

ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பில் குழு ஒன்றை உருவாக்கியதுடன் ஒரு மாதத்திற்குள் குறித்த விவகாரத்திற்கு தீர்வு காணப்படும் என உறுதியளித்துள்ளார். 

காணாமல் போனோரின் உறவினர்களுடன் இன்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே குறித்த உறுதிமொழியினை வழங்கியுள்ளார். கடந்த காலங்களில் பல்வேறு காரணங்களினால் காணாமல் போனோரின் உறவினர்கள் 

தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்தி வருவதுடன், பல்வேறு வாழ்வாதார பிரச்சினைகளையும் எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் குறித்த விவகாரம் தொடர்பாக 

ஏற்கனவே கலந்துரையாடியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இன்று காணாமல் போனோரின் உறவினர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.இதன்போது கருத்து தெரிவித்த காணாமல் போனோரின் உறவினர்கள், தங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது என்பது தெரியப்படுத்த வேண்டும் எனவும் 

உறவுகளை இழந்தமையினால் எதிர்கொண்டு வருகின்ற வாழ்வாதார பாதிப்புக்களுக்கு பரிகாரம் வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தனர். காணாமல் போனோரின் உறவினர்களின் வலிகளை அனுபவ ரீதியாக புரிந்து கொள்வதாக தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, 

பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிகாரத்தினைத்தினை வழங்கி குறித்த விவகாரத்தினை தீர்த்து வைக்க விரும்புவதாகவும் எந்தவிதமான அரசியல் நோக்கங்களும் தனக்கு இல்லை எனவும் தெரிவித்தார்.மேலும், இதுதொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடன் கலந்துரையாடி

ஒரு மாத காலத்தினுள் குறித்த விவகாரத்தினை தீர்த்து வைப்பதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.