பளை பிரதேசத்தில் மட்டும் 2 ஆயிரம் ஏக்கர் காணி உள்ளது..! மக்களுக்கு வழங்க மனமில்லாத அதிகாரிகள், அங்கஜனின் கேள்வியால் விழி பிதுங்கி நின்றனர்..
கிளிநொச்சி - பளை பிரதேசத்தில் மட்டும் காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவிடம் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் காணி இருப்பதாக ஆணைக்குழுவின் வடபிராந்திய உதவி பணிப்பாளர் எஸ்.நிமலன் தொிவித்துள்ளார்.
இன்றையதினம் புதன்கிழமை யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தலைமையிலான கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் இருந்து காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கோப்புகள் அநுராதபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்ட தொடர்பில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றது.
இந்நிலையில் பளை பிரதேசத்தில் அதிகளவு காணிகள் இருப்பதாகவும் அதனை மக்களுக்கு வழங்காது காலம் தாழ்த்துவது தொடர்பில் அமைச்சரின் கவனத்திற்கு அங்கஜன் இராமநாதன் கொண்டு வந்தார்.
இதன்போது ஏன் பாளையில் உள்ள காணிகளை மக்களுக்கு அளிக்க வழங்கவில்லை? என அமைச்சர் கேள்வி எழுப்பினார். பதிலளித்த துறைசார்ந்த அதிகாரி அதற்கான நடவடிக்கைகளை
தாம் எடுப்பதாகவும் மக்கள் ஒத்துழைக்காததால் அளவிடும் பணிகள் தாமதப்படுவதாக கூறினார். குறித்த விடயம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கைகளை எடுக்குமாறும்
ஏதாவது பிரச்சினைகள் இடம்பெற்றால் குறித்த விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் பிரதிநிதிகள் இருவர் இருக்கிறார்கள் அவர்களிடம் தெரிவியுங்கள் என தெரிவித்தார்.