SuperTopAds

அம்பாறை மாவட்ட அபிவிருத்தி தொடர்பாக நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் ஆராய்வு

ஆசிரியர் - Editor III
அம்பாறை மாவட்ட அபிவிருத்தி தொடர்பாக நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் ஆராய்வு

அம்பாறை மாவட்ட அபிவிருத்தி தொடர்பாக  நகர அபிவிருத்தி அதிகார சபை உயர்  அதிகாரிகள் ஆராய்ந்துள்ளனர்.

  ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் விசேட பணிப்புரைக்கு அமைவாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் உயர் அதிகாரிகளைக் கொண்ட குழு அம்பாறை நகர்பகுதி   கல்முனை நிந்தவூர் சம்மாந்துறை பகுதிகளுக்கு  விஜயம் செய்திருந்தது.

அதன் பின்னர் அம்பாறை மாவட்ட  நகர அபிவிருத்தி பணிகள் சம்மந்தமாக அம்பாறை மாவட்ட செயலகத்தில் இன்று கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல். பண்டாரநாயக்க தலைமை தாங்கியதுடன் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வன பரிபாலன இராஜாங்க அமைச்சருமான விமலவீர திசாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்  வைத்திய கலாநிதி திலக் ராஜபக்ச, அம்பாரை மாவட்ட  ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர்  பாராளுமன்ற உறுப்பினர் டப்ளியூ.டி.வீரசிங்க ஆகியோரது மேற்பார்வையுடன் இக்கலந்துரையாடல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இக்கலந்துரையாடலில் துறைசார்  நகர அபிவிருத்தி அதிகாரசபை  உயர் அதிகாரிகள் பலரும்  கலந்து கொண்டு அம்பாறை மாவட்ட அபிவிருத்தி தொடர்பாக பல்வேறு கருத்துக்களை முன்வைத்ததுடன் அதனை செயற்படுத்த சகல தரப்பினரின் ஒத்துழைப்பும் அவசியம் என்பதை வலியுறுத்தினர்.