SuperTopAds

மரண சடங்குகளை நடத்த இறுக்கமான கட்டுப்பாடுகள் அமுல்..! முகம்சுழிக்கவைக்கும் சில நிகழ்வுகளால் பிரதேசசபை எடுத்துள்ள தீர்மானம்..

ஆசிரியர் - Editor I
மரண சடங்குகளை நடத்த இறுக்கமான கட்டுப்பாடுகள் அமுல்..! முகம்சுழிக்கவைக்கும் சில நிகழ்வுகளால் பிரதேசசபை எடுத்துள்ள தீர்மானம்..

கிளிநொச்சி மாவட்டத்தில் மரண சடங்குகள் மற்றும் இறுதி ஊர்வலத்தின்போது முகம் சுழிக்கவைக்கும் நிகழ்வுகள் நடைபெற்றுள்ளமை தொடர்பாக கவனத்தில் எடுக்கப்பட்ட நிலையில் கரைச்சி பிரதேசசபை சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 

இதன்படி புதிய கட்டுப்பாடுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 1ம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் என்பதுடன் மீறுவோர் மீது கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும். எனவும் சபையின் தவிசாளர் அருணாச்சலம் வேளமாலிகிதன் கூறியுள்ளார். 

இது குறித்து இன்று காலை ஊடகங்களை சந்தித்து கருத்து தொிவிக்கையில், அவர் மேலும் குறிப்பிட்டிருந்ததாவது, மரண சடங்குகள், இறுதி ஊர்வலங்களில் முகம் சுழிக்கத்தக்க சம்பவங்கள் தற்போது வழக்கமாக மாறியிருக்கின்றது. 

இந்த நிலை குறித்து மரணமானவர்களின் குடும்பத்தினரே கவலையடையும் நிலையே காணப்படுகின்றது. இந்நிலையில் சில ஒழுங்குகள் அல்லது கட்டுப்பாடுகளை பிரதேசசபை எதிர்வரும் ஏப்ரல் 1ம் திகதி தொடக்கம் அமுலாக்க தீர்மானித்துள்ளது. 

இதன்படி சடலத்தை தகனம் செய்வதற்கு அல்லது அடக்கம் செய்வதற்கு கட்டாயம் அனுமதி பெறப்படவேண்டும். அந்த அனுமதியை மரணித்தவரின் உறவினர் ஒருவர் மட்டுமே பெற்றுக் கொள்ளலாம். தொிந்தவர்கள், நண்பர்களுக்கு அந்த அனுமதி கிடையாது. 

மேலும் அந்த அனுமதியை பெற்றுக் கொள்ளும் உறவினர் மட்டுமே இறுதிச்சடங்கு மற்றும் இறுதி ஊர்வலத்தில் நடக்கும் அத்தனை சம்பவங்களுக்கும் பொறுப்பாளி ஆவார். மேலும் இறுதி ஊர்வலத்தில் 3 இடங்களில் மட்டும் வெடி கொழுத்த அனுமதிக்கப்படும். 

பறை இசைக்கருவி வாசிப்போர் சினிமா பாடல்கள் மற்றும் கழியாட்ட பாடல்களை இசைக்க தடை விதிக்கப்படும். அதனை மீறினால் அவர்களுக்கான அனுமதி இரத்து செய்யப்படும். மேலும் பளை இசை இசைக்கப்படும்போது இளைஞர்கள் ஆடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது. 

மேலும் சடலத்தை தகனம் செய்ய அல்லது அடக்கம் செய்ய அனுமதி பெற்றவர் முறையாகவும் ஒழுக்கமாகவும் இறுதிச்சடங்கு மற்றும் இறுதி ஊர்வலத்தை நடத்த பொறுப்பாளி ஆவார். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நண்பர்கள், தொிந்தவர்களுக்கு அனுமதி கிடையாது. 

காலை 7 மணி தொடக்கம் மாலை 7 மணிவரை தகனம் செய்ய அல்லது அடக்கம் செய்ய மயான அனுமதி வழங்கப்படும். இது தவிர்ந்த வேறு நேரத்தில் இறுதிச்சடங்கு நடத்த அனுமதி கிடையாது. அவ்வாறான நிர்ப்பந்தம் இருக்குமானால் விசேட அனுமதியை பெறவேண்டும். 

இந்த விடயம் பொலிஸாருக்கும் தொியப்படுத்தப்படும். எனவே பிரதேசசபையின் இந்த ஒழுங்கு விதிகளை மீறும் எவர் மீதும் நேரடியாக பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுப்பர் எனவும் தவிசாளர் கூறியிருக்கின்றார்.