தடுப்பூசி போடுவதற்காக பெயர் பதிய வரிசையில் நின்ற முதியவர் மயங்கி வீழ்ந்து மரணம்!!
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள தனது பெயரை பதிவு செய்ய வரிசையில் நின்ற 63 வயது முதியவர் திடீரென மயங்கி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்தியாவில் கடந்த முதலாம் திகதி முதல் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வருபவர்கள் அதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையங்களில் தங்கள் பெயர் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும்.
இந்நிலையில், மகாராஸ்டிர மாநிலம் பல்ஹர் மாவட்டத்தின் நலசோப்ரா பகுதியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்கள் பெயர் மற்றும் விவரங்களை பதிவு செய்துகொள்வதற்காக சிறப்பு முகம் நேற்று நடத்தப்பட்டது. அதில் தடுப்பூசி போட விருப்பமுள்ளவர்கள் வரிசையில் நின்று தங்கள் விவரங்களை அளித்தனர்.
அப்போது, அந்த முகாமிற்கு வந்திருந்த 63 வயது நிரம்பிய ஹரிஸ் பாய் பஞ்சல் என்ற முதியவர் வரிசையில் நின்றுகொண்டிருந்தபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால், அவர் நின்றுகொண்டிருந்த இடத்திலேயே மயங்கி கீழே விழுந்தார்.
அப்போது அங்கு இருந்த மருத்துவ ஊழியர்கள் முதியவரை மீட்டு அவரை பரிசோதனை செய்தனர். அதில் அந்த முதியவர் மயங்கி விழுந்த இடத்திலேயே உயிரிழந்துவிட்டார் என்பது தெரியவந்தது.