SuperTopAds

சுழற்சி முறையில் நடக்கும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் அம்பாறையில் பங்குபற்றியவர்களுக்கு நீதிமன்றம் தடையுத்தரவு

ஆசிரியர் - Editor III
சுழற்சி முறையில் நடக்கும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் அம்பாறையில் பங்குபற்றியவர்களுக்கு நீதிமன்றம் தடையுத்தரவு

அம்பாறை மாவட்டம் பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்று வருகின்ற சுழற்சி முறையில் நடக்கும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் பங்குபற்றியவர்களுக்கு நீதிமன்ற கட்டளை தடையுத்தரவு பொலிஸாரினால் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை(5) ஆரம்பமாகி இப்போராட்டம் இடம்பெற்று வந்த நிலையில்  கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி இந்திக்க உதயங்கர தலைமையிலான பொலிஸ் குழு போராட்டத்தில் பங்குபற்றியவர்களுக்கு தற்போது  கல்முனை நீதிவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட கட்டளையினை அவ்விடத்தில் வாசித்ததுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கும் வழங்கினர்.

இதன் போது அம்பாரை மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் ,கல்முனை இளைஞர் சேனையின் முன்னாள் தலைவர் தாமோதரம் பிரதீபன் ,அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க தலைவி தம்பிராசா செல்வராணி, நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் என். தர்சினி , கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரன் ராஜன்,  உட்பட  பலருக்கு நீதிமன்ற தடை உத்தரவு  வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை இடம்பெற்ற பேரணி போது கலந்துகொண்ட மக்கள் குறித்த சுழற்சி உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பதுடன் விசேடமாக இப்போராட்டத்தில்  முஸ்லிம் மக்களும் இப்போராட்டத்தை  ஆதரிக்கவில்லை  என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.