தமிழகத்தில் மீண்டும் கால்பதிக்கவுள்ள சசிகலா!! -ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் அமைப்போம் என்கிறார் தினகரன்-
பெங்களூருவில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவரும் சசிகலா எதிர்வரும் 7ஆம் திகதி தமிழகம் வருகிறார் என்று டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்குப் பின் கடந்த மாதம் 27 ஆம் திகதி சிறையில் இருந்து சசிகலா விடுதலை செய்யப்பட்டார். இருப்பினும் விடுதலையாவதற்கு முன்னர் கடந்த 20 ஆம் திகதி பெங்களூர் விக்டோரியா அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இதனால், சசிகலா 11 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 31 ஆம் திகதி சசிகலா வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார். இருப்பினும் சசிகலா வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ளுமாறு வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று காலை மதுரையில் நெல் பேட்டையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அங்கிருந்து திருமண வைபவம் ஒன்றிற்குச் சென்றார். திருமண விழா முடிந்த பின்னர், திருமண மேடையில் டிடிவி தினகரன் பேசியதாவது:-
பெங்களூருவில் தங்கியிருக்கும் சசிகலா வரும் 7 ஆம் திகதி தமிழகம் வருகிறார். உண்மையான தொண்டர்கள், விஸ்வாசத்தின் பக்கம் உள்ளார்கள் சசிகலா பக்கம் இருக்கிறார்கள். சசிகலா தலைமையில் தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் அமைப்போம்.
ஜெயலலிதா ஆட்சியை அமைக்க, அதிமுகவை மீட்டெடுக்க ஒற்றுமையுடன் செயல்படுவோம். மேலும், சசிகலா தமிழக வருவதால் பலரும் அச்சத்தில் உள்ளனர். சசிகலா விடுதலையான நிலையில் ஜெயலலிதா நினைவிடம் பணி நிறைவு பெறாமல் அவசர அவசரமாக திறக்கப்பட்டுள்ளது என்றார்.