SuperTopAds

குடியரசு தின செங்கோட்டை முற்றுகை போராட்டம்!! -விவசாயிகள் மீது தேசத் துரோக வழக்கு-

ஆசிரியர் - Editor II
குடியரசு தின செங்கோட்டை முற்றுகை போராட்டம்!! -விவசாயிகள் மீது தேசத் துரோக வழக்கு-

இந்திய குடியரசு தினத்தில் செங்கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது பொலிஸார் தேசத் துரோக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில், அரியானா மற்றும் பஞ்சாப் விவசாயிகள் 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துள்ள நிலையில் குடியரசு தினத்தன்று சிங்கு மற்றும் திக்ரி எல்லைகளில் முகாமிட்டிருந்த விவசாயிகள், பொலிஸ் தடைகளையும் உடைத்து டெல்லி நகரத்திற்குள் நுழைந்தனர்.

உழவு இயந்திரத்தில் நடத்தப்பட்ட பேரணி வன்முறையாக மாறிய போது விவசாயிகளில் ஒரு பிரிவினர் பஞ்சாபி நடிகர் தீப் சித்து தலைமையில் செங்கோட்டையை முற்றுகையிட்டு அதற்கு நுழைந்தனர். செங்கோட்டையின் கோபுரத்தின் மீது, ஏறி தேசியக் கொடி ஏற்றப்படும் இடத்தில் சீக்கிய மதத்தின் கொடியை ஏற்றினர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக டெல்லி பொலிஸார் தேசத்துரோக வழக்கைப் பதிவு செய்துள்ளனர். இதன் முதற்கட்டமாக டெல்லி செங்கோட்டைக்குள் அத்துமீறி நுழைந்தவிவகாரத்தில் பஞ்சாப் நடிகர் தீப் சித்து, சமூக ஆர்வலர் லகா சிதானா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்கோட்டைக்குள் சென்று சீக்கிய மதக்கொடி ஏற்பபட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, நேற்று முதல் வரும் 31 ஆம் திகதிவரை செங்கோட்டைக்குள் சுற்றுலாப் பயணிகள் யாரும் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.