4 வருட சிறைவாசம் முடித்து சசிகலா இன்று விடுதலை!!
பெங்களூரு சிறை நிர்வாகம் ஏற்கனவே அறிவித்தபடி 4 ஆண்டுகள் சிறை தண்டனை அணுபவித்துவந்த சசிகலா இன்று வியாழக்கிழமை விடுதலை செய்யப்பட்டார்.
முன்னதாகவே இதற்கு கர்நாடக பொலிஸ் துறை அனுமதி வழங்கிவிட்டது. இதையடுத்து சிறை அதிகாரிகள் முற்பகல் 11 மணி அளவில் விக்டோரியா வைத்தியசாலைக்கு வந்து சசிகலாவை சந்தித்தனர்.
அவரிடம் விடுதலை செய்வதற்கான ஆவணங்களில் கையெழுத்து பெற்றனர். கையொப்பம் பெற்று, நகலை வைத்தியசாலை நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.
இதனைத்தொடர்ந்து சிறை சார்பில் அளிக்கப்பட்டு வரும் பொலிஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட உள்ளது. பிறகு அவரை குடும்பத்தினர் தங்களின் பொறுப்பில் பார்த்துக் கொள்வார்கள்.
சசிகலாவுக்கு தொடர்ந்து விக்டோரியா வைத்தியசாலையிலேயே சிகிச்சை அளிப்பதா? அல்லது தனியார் வைத்தியசாலைக்கு அழைத்து செல்வதா? என்பது குறித்து உறவினர்கள் கலந்து ஆலோசித்து முடிவு செய்ய உள்ளனர்.
அதே நேரத்தில் தற்போதைய நிலையில் அடுத்த சில நாட்கள் சசிகலா பெங்களூருவில் தான் இருக்கப்போகிறார். அவரது உடல்நிலை நன்றாக தேறிய பிறகே அவரை தமிழகத்திற்கு அழைத்து செல்ல குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர்.
இன்று விடுதலை செய்யப்பட்ட பின் நாளை சசிகலாவுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று அறிக்கை வந்தால், அவரை மறுநாள் விடுவிக்க அந்த வைத்தியசாலை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது