SuperTopAds

வீறுகொண்டு எழும் விவசாயிகள் போராட்டம்!! -பேரணிக்காக டெல்லிக்குள் நுழையும் 2 இலட்சம் உழவு இயந்திரங்கள்-

ஆசிரியர் - Editor II
வீறுகொண்டு எழும் விவசாயிகள் போராட்டம்!! -பேரணிக்காக டெல்லிக்குள் நுழையும் 2 இலட்சம் உழவு இயந்திரங்கள்-

டெல்லியில் நாளை மறுநாள் உழவு இயந்திர பேரணி நடத்த திட்டமிட்டுள்ள விவசாயிகள், டெல்லியின் 5 எல்லைப் பகுதிகளில் இருந்தும் உழவு இயந்திரங்களில் செல்ல தயாராக உள்ளனர்.

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண்மை சட்டங்களை வாபஸ்பெற வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் 2 மாத காலமாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் நேற்று டெல்லி பொலிஸார் 5 ஆவது கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இறுதியில் விவசாயிகள் டெல்லியில் பேரணி நடத்துவதற்கு அனுமதி கொடுத்தனர்.

பொலிஸ் அனுமதியை அடுத்து சிங்கு எல்லையில் விவசாயிகள் சங்கத்தினர் மீண்டும் கூடி ஆலோசனை நடத்தினார்கள். அப்போது எவ்வளவு தூரத்துக்கு பேரணி நடத்துவது, எந்த வழியாக பேரணி செல்வது என்று முடிவு செய்தனர்.

அதன்படி தற்போது விவசாயிகள் முகாமிட்டு இருக்கும் காசிப்பூர், சிங்கு, திக்ரி 3 எல்லைகள் வழியாக டெல்லிக்குள் நுழைவது. அதன்பிறகு 5 முனைகளில் இருந்தும் பேரணியை தொடங்குவது என்று முடிவு செய்தனர்.

சிங்கு, திக்ரி, காசிப்பூர், பல்வால், ஷாஜகான்பூர் ஆகிய 5 முனைகளில் இருந்தும் உழவு இயந்திரங்கள் டெல்லி நகருக்குள் செல்லும்.

மொத்தம் 100 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரோடு ஷோ நடைபெறும் என்று விவசாயிகள் சங்க தலைவர் யோகேந்திர யாதவ் கூறினார்.

மேலும் விவசாயிகள் சங்க தலைவர்கள் கூறிய தாவது:-

இந்த பேரணியில் 2 இலட்சம் உழவு இயந்திரங்கள் பங்கேற்கும். முதலில் இருந்ததைவிட இப்போது விவசாயிகள் எழுச்சியாக போராட்டத்தில் கலந்துகொண்டு வருகிறார்கள்.

இதனால் போராட்டத்துக்கு வருபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாங்கள் எதிர்பார்த்ததைவிட போராட்டத்துக்கு வரும் உழவு இயந்திரங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

உழவு இயந்திரங்கள் பேரணி எவ்வளவு நேரம் நடக்கும் என்பதை சொல்ல முடியாது. 24 மணிநேரத்தில் இருந்து 72 மணிநேரம் வரை பேரணி நீடிக்க வாய்ப்பு உள்ளது.

பேரணியை ஒழுங்குபடுத்தவும், தேவையான உதவிகளை செய்யவும் 2,500 தன்னார்வலர்கள் பணியாற்ற உள்ளனர். பேரணியை வழிநடத்த கட்டுப்பாட்டு அறை ஒன்றும் அமைக்கப்படுகிறது.

உழவு இயந்திரங்கள் பேரணி மிக அமைதியான முறையில் நடைபெறும். எந்த வன்முறைக்கும், தவறுகளுக்கும் இடம் இருக்காது. டிராக்டர்களில் விவசாயிகள் சங்க கொடி மற்றும் தேசிய கொடி கட்டப்பட்டு இருக்கும். வேறு கொடிகளுக்கு அனுமதி இல்லை என்றார்.