SuperTopAds

இந்தியாவில் 2 நாளில் 2.24 இலட்சம் பேருக்கு தடுப்பூசி!! -447 பேருக்கு பக்க விளைவு: 3 பேர் வைத்தியசாலையில்-

ஆசிரியர் - Editor II
இந்தியாவில் 2 நாளில் 2.24 இலட்சம் பேருக்கு தடுப்பூசி!! -447 பேருக்கு பக்க விளைவு: 3 பேர் வைத்தியசாலையில்-

இந்தியா முழுவதும் இதுவரை கொரோனா வைரசுக்கான தடுப்புசி போட்டுக் கொண்ட 2.24 இலட்சம் பேரில் 447 பேருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.

இந்தியாவில் கொரோனாவை கொன்றொழிப்பதற்காக நேற்று முன்தினம் முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதற்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கோவேக்சின் மற்றும் சீரம் நிறுவனம் தயாரித்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்-அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனங்களின் கோவிசீல்டு ஆகிய 2 தடுப்பூசிகளும் நாடு முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் கடந்த 2 நாட்களில் மட்டும் நாடு முழுவதும் 2.24 இலட்சத்துக்கு அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் நாளில் மட்டும் 2,07,229 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

இந்த 2 நாட்களில் வெறும் 447 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டபின் பக்க விளைவுகள் ஏற்பட்டன. அதில் 3 பேருக்கு மட்டுமே வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மற்ற அனைவருக்கும் லேசான காய்ச்சல், தலைவலி, குமட்டல் போன்ற பிரச்சினைகள் தான் ஏற்பட்டன.

இந்நிலையில் தடுப்பூசியில் உள்ள குறைபாடுகளை களைந்து சீரமைப்பு நடவடிக்கைகள் எடுப்பதற்காக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் நேற்று ஆய்வு கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.