யாழ்.மாவட்ட மக்களுக்கு பணிப்பாளர் விடுத்துள்ள அறிவிப்பு..! நாள்பட்ட தொற்றா நோய் உள்ளவர்கள் கட்டாயம் சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்..

ஆசிரியர் - Editor I

யாழ்.மாவட்டத்தில் பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளும் யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்.பல்கலைகழக மருத்துவ பீடம் ஆகியவற்றில் 2020ம் ஆண்டு மார்ச் மாதம் தொடக்கம் இதுவரை 47683 பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார்.

யாழ் போதனா வைத்தியசாலையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவித்ததாவது, யாழ் போதனா வைத்தியசாலை கொவிட் -19 தொற்றுநோய்க்கான சிகிச்சையையும் வழங்கி வருகிறது.

போதனா வைத்தியசாலையில் இதுவரை 41 ஆயிரத்து 248 பேருக்கும், யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 6 ஆயிரத்து 435 பேருக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனஇந்த இரண்டு இடங்களிலும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 644 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று அபாயம் நிலவிக்கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் யாழ் போதனா வைத்தியசாலை ஏனைய சிகிச்சைகளையும் உரிய கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது.

ஆகவே பொதுமக்கள் நீண்டநாள் வியாதி உடையவர்கள் குறிப்பாக, உயர் குருதி அழுத்தம், நீரிழிவு, இருதய நோய் மற்றும் மேலும் பல நோய் உள்ளவர்கள் கிரமமாக அவர்களுக்குரிய சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.

குறிப்பாக, கடந்தகாலப் பகுதிகளில் உயர் குருதி அழுத்தம் மற்றும் இருதய நோயுடைய ஒரு சிலர் உரிய நேரத்தில் வைத்தியசாலைக்கு வருகை தராமல் உயிரிழப்புகள் பதியப்பட்டு இருக்கின்றன. இது தவிர்க்கப்பட வேண்டும்.

2020ஆம் ஆண்டு டெங்கு நோய் தாக்கத்தினால் 866 பேர் சிகிச்சைபெற்று வெளியேறி இருக்கின்றார்கள். இது 2019 ஆம் ஆண்டோடு ஒப்பிடும் போது குறைவாகவே காணப்படுகின்றது. 2019 ஆம் ஆண்டு 4 ஆயிரத்து 415 பேர் டெங்கு நோய் தாக்கத்தினால் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள்.

எனவே தற்போது மழையுடன் கூடிய காலநிலை நீடிப்பதால் டெங்கு பரவக்கூடிய அபாயம் காணப்படுகின்றது. பொதுமக்கள் விழிப்பாக இருப்பது அவசியமாகும் என்றார்.

Radio