SuperTopAds

இந்தியாவில் இன்று முதல் தடுப்பூசி!! -3 கோடி பேருக்கு போடப்படுகிறது-

ஆசிரியர் - Editor II
இந்தியாவில் இன்று முதல் தடுப்பூசி!! -3 கோடி பேருக்கு போடப்படுகிறது-

இந்தியா முழுவதும் இன்று சனிக்கிழமை முதல் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. முதல்கட்டமாக முன்கள பணியாளர்கள் 3 கோடி பேருக்கு செலுத்தப்படுகிறது.

ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சிலுடன் இணைந்து ‘கோவேக்சின்’ தடுப்பூசியை உருவாக்கியது.

அதேபோல இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், ஆஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் இணைந்து உருவாக்கிய தடுப்பூசியை புனேயைச் சேர்ந்த சீரம் நிறுவனம் ‘கோவிஷீல்டு’ என்ற பெயரில் தயாரித்துள்ளது.

பல்வேறு கட்ட வெற்றிகரமான பரிசோதனைக்கு பின், இந்த தடுப்பூசிகளின் அவசர பயன்பாட்டுக்கு இந்திய தலைமை கட்டுப்பாட்டு அதிகாரி அனுமதி அளித்தார்.

அதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 9 ஆம் திகதி உயர்மட்ட குழுவினருடன் ஆய்வு செய்தார். அதன் பின், இன்று சனிக்கிழமை முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது.

முதல்கட்டமாக, சுகாதார பணியாளர்கள் மற்றும் கொரோனாவுக்கு எதிரான முன்கள பணியாளர்கள் சுமார் 3 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படும். அடுத்ததாக 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், 50 வயதுக்கு உட்பட்ட நோயாளிகள் என சுமார் 27 கோடி பேருக்கு போடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

முன்கள பணியாளர்கள் 3 கோடி பேருக்கு தடுப்பூசி போடுவதற்கான செலவை மத்திய அரசே ஏற்பது குறிப்பிடத்தக்கது.

உலகிலேயே மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி திட்டத்தை இந்தியா இன்று தொடங்குகிறது.

இன்று சனிக்கிழமை முதல் நாடு முழுவதும் கோவேக்சின், கோவிசில்டு ஆகிய 2 தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. இந்த மாபெரும் திட்டத்தை இன்று பிரதமர் நரேந்திர மோடி ஆரம்பித்து வைத்தார். மேலும் தமிழகத்தில் இந்த பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் இன்று ஆரம்பித்துவைத்தார்.