உங்களுடைய உணர்வு எனக்கும் உள்ளது. நானும் மனவருத்தப்படுகிறேன்..! இடித்த இடத்தில் மீண்டும் நினைவு துாபியை கட்டுவேன். யாழ்.பல்கலைகழக துணைவேந்தர் கூறுகிறாராம்..
யாழ்.பல்கலைகழக நினைவுதுாபி இடிக்கப்பட்டமை தமக்கும் கவலைதான். இடிக்கப்பட்ட துாபியை மீண்டும் அங்கீகாரத்துடன் கட்டுவேன். என துணைவேந்தர் ஸ்ரீ சற்குணராஜா தன்னிடம் கூறியதாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் கூறியுள்ளார்.
நினைவு துாபி இடிக்கப்பட்டதை கண்டித்து உணவு தவிர்ப்பு போராட்டம் நடத்திவரும் மாணவர்களை இன்று மாலை சந்தித்து கலந்துரையாடும்போதே சித்தார்த்தன் மேற்கண்டவாறு மாணவர்களுக்கு கூறியிருக்கின்றார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோர் போராட்டக்களத்திற்கு சென்றனர். பின்னர், பல்கலைகழக துணைவேந்தரை சந்தித்து பேசினர் இதன்போதே மேற்கண்டவாறு கூறியதாக சித்தார்த்தன் கூறினார்.
இந்த நினைவுத்தூபியை இடிக்க எனக்கு அழுத்தம் தந்தார்கள். இப்பொழுது பலர் தமக்கு தொடர்பில்லையென கூறுகிறார்கள். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. அதை நான் பல்கலைகழக பேரவை கூட்டத்தில் வெளிப்படுத்துவேன். போராடும் மாணவர்களின் உணர்வு எனக்கும் உள்ளது.
இந்த தூபியை இடித்தது எனக்கும் கவலைதான். அதை மீள அமைக்க உரிய வழிமுறைகளில் நான் தயாராக இருக்கிறேன். இது பற்றி மாணவர்களுடன் பேசவுள்ளேன் என தெரிவித்துள்ளதாக சித்தார்த்தன் கூறியுள்ளார்.