திரையரங்ளை திறப்பது தற்கொலை முயற்சிக்கு சமமாகும்!! -விஜயை மென்சன் செய்து உருக்கமான பதிவினை வெளியிட்ட வைத்தியர்-

ஆசிரியர் - Editor II
திரையரங்ளை திறப்பது தற்கொலை முயற்சிக்கு சமமாகும்!! -விஜயை மென்சன் செய்து உருக்கமான பதிவினை வெளியிட்ட வைத்தியர்-

மாஸ்டர், ஈஸ்வரன் படத்துக்காக திரையரங்குகளை 100 சதவீத ஆசன அனுமதியுடன் திறப்பது குறித்து வைத்தியர் ஒருவர் உருக்கமான பதிவினை வெளியிட்டுள்ளார். 

கொரோனா வைரஸ் பரவல் முழுமையாக கட்டுப்படுத்தப்படாத நிலையில் திரையரங்குகளை திறப்பது தொடர்பில் திரையுலகை சேர்ந்த அரவிந்த்சாமி, கஸ்தூரி, லக்ஸ்மி ராமகிருஸ்ணன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் வைத்தியரான அரவிந்த் ஸ்ரீனிவாஸ் என்பவர் தனது முகப்புத்தகத்தில் பதிவிட்ட உருக்கமான பதிவொன்று பிரபலமாகியுள்ளது 

அவர் அந்த பதிவில் டியர் விஜய் சார், சிலம்பரசன் சார் மற்றும் மரியாதைக்குரிய தமிழக அரசு. நான் சோர்வாக இருக்கிறேன். நாங்கள் அனைவரும் சோர்வாக உள்ளோம். என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான வைத்தியர்கள்  சோர்வாக இருக்கிறார்கள். சுகாதாரத் துறை ஊழியர்கள், பொலிஸ் அதிகாரிகள், தூய்மைப் பணியாளர்கள் சோர்வாக உள்ளனர்.

கொரேனா நோய் பரவல் தடுக்க நாங்கள் அனைவரும் கடுமையாக வேலை செய்து கொண்டிருக்கிறோம். எங்கள் வேலையை பெருமைப்படுத்தி சொல்லவில்லை. பார்ப்பவர்களுக்கு அது பெரிய விடயமாகவும் தெரியவில்லை. 

எங்களுக்கு முன்பு கேமராக்கள் இல்லை. நாங்கள் ஸ்டண்ட் காட்சிகளில் நடிப்பது இல்லை. நாங்கள் ஹீரோக்கள் இல்லை. ஆனால் எங்களுக்கும் மூச்சுவிட நேரம் வேண்டும். சிலரின் சுயநலம் மற்றும் பேராசைக்காக நாங்கள் பலிகடா ஆக விரும்பவில்லை.

பான்டமிக் இன்னும் முடியவில்லை. இந்த நோயால் இன்னும் மக்கள் இறக்கிறார்கள். திரையரங்குகளில் 100 வீத பார்வையாளர்களை அனுமதிப்பது தற்கொலை முயற்சி. இல்லை கொலை, சட்டம் செய்பவர்களோ, ஹீரோக்களோ கூட்டத்துடன் சேர்ந்து படம் பார்க்கப் போவது இல்லை. 

உயிருக்கு பணத்தை வியாபாரம் செய்கிறார்கள். நாம் நம் வாழ்க்கையில் கவனம் செலுத்தி, இந்த பான்டமிக்கில் இருந்து வெற்றிகரமான மீண்டு வர முயற்சிக்கலாமா? மெதுவாக அணையும் தீயை மீண்டும் தூண்டிவிட வேண்டாமே, அது இன்னும் முழுதாக அணையவில்லை.

நாம் ஏன் இன்னும் ஆபத்தில் இருக்கிறோம் என்பதை அறிவியல் ரீதியாக விளக்க நினைத்தேன். ஆனால் என்ன பயன் என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன் என்று கூறியுள்ளார்.