யாழ்.வல்வெட்டித்துறை கடலில் இந்திய மீனவர்கள் அட்டூழியம்..! மீனவர் மீது தாக்குதல் நடத்தி, மீன்கள் மற்றும் பொருட்கள் கொள்ளை..

ஆசிரியர் - Editor I

யாழ்.வல்வெட்டித்துறை - ஆதிகோவிலடி கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இந்திய வல்வெட்டித்துறை மீனவர் மீது இந்திய மீனவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதுடன் படகு மற்றும் இயந்திரத்தையும் சேதப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் தாக்குதலில் காயமடைந்த மீனவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, 

வல்வெட்டித்துறையில் இருந்து நேற்று முன்தினம் மீன்பிடிக்க புறப்பட்ட அப்புலிங்கம் - அமிர்தலிங்கம்  எனப்படும் 46 வயது மீனவர் இலங்கை கரையில் இருந்து 11 மைல் தொலைவில் மீன் பிடியில் ஈடுபட்டிருந்த சமயம் 

அப்பகுதிக்கு வந்த 3 இந்திய  நாட்டுப் படகுகள் குறித்த மீனவரின் படகினை சுற்றி வளைத்துள்ளது. இதன்போது 2 நாட்டுப் படகுகள் பாதுகாப்பு வழங்க ஒரு நாட்டுப் படகில் இருந்த 4  இந்திய மீனவர்களில் மூவர் 

வல்வெட்டித்துறை மீனவரின் படகில் ஏறி கழுத்தில் வாள் வைத்து அச்சுறுத்தி  தாக்குதல் நடாத்தியதாக பாதிக்கப்பட்ட மீனவர் முறைப்பாடு செய்துள்ளார்.

தாக்குதலின்போது மீனவரின் படகில் இருந்த மீன்கள் மற்றும் ஜீ.பி.எஸ் கருவியினையும் இந்திய மீனவர்கள் பறித்து எடுத்துச் சென்றதுடன் கைத் தொலைபேசியை பறித்து கடலில் வீசி இயந்திரத்தை அடித்து உடைத்துள்ளதாக பாதிக்கப்பட்ட மீனவர் தெரிவிக்கின்றார்.

இந்தச் சம்பவங்களையடுத்து அடி காயங்களிற்கு இலக்கான மீனவர் கரை திரும்பி வல்வெட்டித்துறை பொலிஸில் முறைப்பாடு செய்ததோடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்த விடயங்கள் தொடர்பில் உடனடியாக யாழில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்திற்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக வடமராட்சி மீனவர் சங்க சமாசத் தலைவர் வர்ணகுலசிங்கம் தெரிவித்தார்.

இவ்வாறு இடம்பெற்றமை தொடர்பாக யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத்துறை உதவிப் பணிப்பாளரிற்கு சங்கம் உடனடியாக எழுத்தில் முறையிட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு