SuperTopAds

பேச்சுவார்த்தைக்கு வாருங்கள்!! -33 நாட்களாக போராடும் விவசாயிகளுக்கு மத்திய அரசு அழைப்பு-

ஆசிரியர் - Editor II
பேச்சுவார்த்தைக்கு வாருங்கள்!! -33 நாட்களாக போராடும் விவசாயிகளுக்கு மத்திய அரசு அழைப்பு-

தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் வரும் நாளை மறுதினம் 30 ஆம் திகதி பேச்சுவார்த்தைக்கு வரும்படி மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை இரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் டெல்லி எல்லையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தொடர்ச்சியாக 33 ஆவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  

விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு இதுவரை 5 தடவைகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடீந்துள்ளது. 

இந்நிலையில் விவசாயிகளின் போராட்டமும் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. டெல்லி எல்லையின் பல்வேறு சாலைகளை முடக்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாய அமைப்புகள் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வரும்படி மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

நாளை மறுதினம் 30 ஆம் திகதி புதன்கிழமை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வரும்படியும், அரசு பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாகவும், இந்த பேச்சுவார்த்தையில் விவசாய அமைப்புகள் கலந்துகொள்ள வேண்டும் எனவும் மத்திய அரசு தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு விடுத்துள்ள பேச்சுவார்த்தை அழைப்பை ஏற்பது குறித்து விவசாய அமைப்புகள் விரைவில் முடிவெடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.