SuperTopAds

கடலில் மூழ்கிய மாணவரை போராடி மீட்ட இளைஞர்கள்!! -பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது விபரீதம்-

ஆசிரியர் - Editor II

பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது கடல் அலையில் சிக்கி மூழ்கிய மாணவரை போராடி மீட்ட இளைஞர்களுக்கு பாராட்டு குவிகிறது.

புதுச்சேரி மாநிலம் முத்திரையர்பாளையத்தை சேர்ந்தவர் எழிலரசு இலங்கையில் பணியாற்றி வருகிறார். இவரது குடும்பத்தினர் முத்திரையர் பாளையத்தை வசித்து வருகின்றனர். இவரது மகன் புவியரசன் (வயது 17). வில்லியனூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

இந்தநிலையில் திலகர் நகரை சேர்ந்த இவரது நண்பர் பாலாஜியின் பிறந்தநாளை கொண்டாட புவியரசன் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் தவளக்குப்பம் அடுத்துள்ள புதுக்குப்பம் கடற்கரைக்கு நேற்று முன்தினம் சென்றனர். அங்கு பாலாஜியுடன் சேர்ந்து கேக் வெட்டி அவரது பிறந்த நாளை கொண்டாடினர்.

பின்னர் பாலாஜியும், புவியரசனும் அங்கு கடலில் குளித்தனர். அப்போது திடீரென எழுந்த மிகப் பெரிய அலை அவர்கள் இருவரையும் இழுத்துச் சென்றது. அதனைப் பார்த்த அவரது நண்பர்கள் உதவி கேட்டு அலறினர். 

சத்தம் கேட்டு பாரடைஸ் கடற்கரையில் இருந்த பூரணாங்குப்பம் பகுதியை சேர்ந்தவரும், புதுச்சேரி கிரிக்கெட் நடுவருமான அய்யனார் (வயது 27) துணிச்சலாக தனது உயிரைப் பற்றியும் கவலைப்படாமல் கடலில் குதித்து பாலாஜியை உயிருடன் மீட்டு கரைக்கு கொண்டு வந்தார். அய்யனாருடன் வந்த ஹரிகிருஸ்ணன் (வயது 29) முதலுதவி செய்தார். பின்னர் பாலாஜியை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.