யாழ்ப்பாணம் - காரைக்கால் இடையில் விரைவில் கப்பல் சேவை..! காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி பணிகளும் விரைவில்..
யாழ்ப்பாணம் - காங்கேசன்துறையிலிருந்து தமிழகம் - காரைக்கால் வரையிலான பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு இந்தியா முன்வைத்துள்ள யோசனையை தொடர்ந்து கப்பல்துறை மற்றும் துறைமுக அமைச்சர் ரோஹித அபயகுணவர்த்தன இன்று காங்கேசன்துறைக்கு விஜயம் செய்து நிலமைகளை ஆராய்ந்துள்ளார்.
அமைச்சரின் இந்த விஜயத்தின்போது காங்கேசன்துறை துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகள் தொடர்பாக ஆராயப்பட்டிருக்கின்றது. இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் ரோஹித அபய குணவர்த்தன, கப்பற் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஜெயந்த சமரவீர,
நீரியல் மற்றும் மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான அங்கஜன் இராமநாதன் ஆகியோர் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கள விஜயம் மேற்கொண்டு ஆய்வினை மேற்கொண்டனர்.
துறைமுகத்தின் நிர்மாணப் பணிகள் இந்திய எக்ஸிம் வங்கியின் (Exim Bank) நிதி உதவியுடன் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தக நடவடிக்கைகளை காங்கேசன்துறை துறைமுகத்தினூடாக மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.