SuperTopAds

யாழ்.மாவட்டத்தில் நேற்று மட்டும் 36 பேருக்கு தொற்று என்கிறது செயலணி, இல்லை 6 பேருக்கு என்கிறார் பணிப்பாளர்..! முழு பூசனிக்காயை சோற்றுக்குள் மறைக்கிறார்களா..?

ஆசிரியர் - Editor I

யாழ்.மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 36 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக தேசிய கொரோனா தடுப்பு செயலணியின் நாளாந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் நிலையில் 6 பேருக்கு மட்டுமே தொற்று ஏற்பட்டிருப்பதாக சுகாதார அதிகாரிகளினால் கூறப்பட்டிருக்கின்றது. 

நாட்டில் நேற்றய தினம் மட்டும் 760 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் அவர்களில் கொழும்பு மாவட்டத்தில் 397 பேருக்கும் களுத்துறை மாவட்டத்தில் 136 பேருக்கும், கண்டி மாவட்டத்தில் 55 பேருக்கும், கம்பஹா மாவட்டத்தில் 50 பேருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த மாவட்டங்களுக்கு அடுத்தபடியாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 36 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஒக்டோபர் 4ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட இரண்டாவது கோரோனா வைரஸ் தொற்று அலையின் பின்னர் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 120 பேர் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

என்று கொவிட் -19 நோயைக் கட்டுப்படுத்தும் தேசிய செயலணியின் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.கொழும்பு மாவட்டத்தில் அதிகப்படியாக 14 ஆயிரத்து 107 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை மருதனார்மடம் சந்தையுடன் தொடர்புடைய 31 பேருக்கு தொற்று உறுதியானதாக

முதற்கட்ட தகவல்கள் வெளியாகியிருந்தது. ஆனாலும் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி வெறும் 6 பேருக்கு மட்டுமே தொற்று உறுதியானதாக கூறியிருந்தார். மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஆ.கேதீஸ்வரனும் அது குறித்த தெளிவுபடுத்தலை வழக்க பின்னடித்தார். 

இந்நிலையில் மாகாண சுகாதார பிரிவு எதோவொரு தகவலை மறைத்துள்ளமை அம்பலமாகியுள்ளது.