8 மாதங்களாக சம்பளம் கொடுக்காத ஐபோன் தொழிற்சாலை!! -அடித்து நொறுக்கிய ஊழியர்கள் வாகனங்களுக்கும் தீ வைத்தனர்-
கர்நாடகாவில் ஐபோன் தொழிற்சாலையில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு கடந்த 8 மாதங்களாக ஊதியம் கொடுக்காததால் ஆத்திரம் அடைந்த ஊழியர்கள் ஐபோன் தொழிற்சாலையை அடித்து நொறுக்கி, அங்குள்ள வாகனங்களுக்கும் தீ வைத்தனர்.
அம்மாநிலத்தின் கோலார் மாவட்டத்தில் நரசப்புரா என்ற இடத்தில் தைவான் நாட்டின் விஸ்டிரான் என்ற ஐபோன் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த நிறுவனத்தில் ஊழியர்களுக்கு கடந்த 8 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.
இதனால் ஊதியம் வழங்கக் கோரி தொழிற்சங்கங்கள் மூலம் நிர்வாகத்திடம் பல கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. இதனால் தொழிற்சாலை ஊழியர்கள் திடீர் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊதியத்தைத் தராத ஆத்திரத்தில், தொழிற்சாலையின் நாற்காலிகள், கணினிகள், தொலைக்காட்சிப் பெட்டிகள் என அனைத்தையும் ஊழியர்கள் அடித்து நொறுக்கினர்.
நிறுவனத்துக்கு சொந்தமான வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டது. ஒரு அறையில் தீ வைக்கப்பட்டது. உடனடியாக அது பொலிஸாரினால் அணைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.