18 வயதுக்குட்பட்ட சிறுவனுக்கு காணி வழங்கிய பிரதேச செயலகம்..! மோசடி அம்பலமானதால் விழி பிதுங்கி நிற்கும் பிரதேச செயலர்..
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேச செயலகம் 18 வயதிற்கு குறைந்த சிறுவன் ஒருவனுக்கு காணி அனுமதி பத்திரம் வழங்கியமை காணி பயன்பாட்டு குழு கூட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் முத்துச்சாமி முகுந்தகஜனால் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தில் தவறு ஏற்பட்டுள்ளமையை பிரதேச செயலாளர் உள்ளிட்டோர் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் முகுந்தகஜன் தெரிவித்துள்ளார். ஒட்டுசுட்டான் குடியேற்ற உத்தியோத்தார் விமலகாந்தன் குறித்த காணி உரிமம் தொடர்பில்
ஊழலில் ஈடுபட்டுள்ளமை உறுதியாகியுள்ளது. இலங்கை காணி கட்டளைச்சட்டத்தின் பிரகாரம் 18 வயது கடந்த ஒருவருக்கே காணி உரிமம் வழங்க வேண்டும் என்ற விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.குறித்த காணி 1980.12.31 அன்று யோகரட்ணம் சூரியகலா என்பவருக்கு
2 ஏக்கர் காணி அனுமதி பத்திரத்திரம் வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் குறித்த காணி அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்யாது 2016ம் ஆண்டு புதிதாக மூவருக்கு தலா அரை ஏக்கர் வீதம் இருவருக்கும் ஒரு ஏக்கர் அதே குடும்பத்தை சேர்ந்தவருக்கும்
குடியேற்ற உத்தியோகத்தர் விமலகாந்தனால் வழங்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் இன்றைய கூட்டத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் முத்துச்சாமி முகுந்தகஜன் தெரிவித்தார்.
குறித்த குடியேற்ற உத்தியோகத்தர் 2014ம் ஆண்டு காலப்பகுதியில் கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகத்தில் கடமையாற்றியபோது காணி ஊழல் தொடர்பில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில் அதிகாரிகளால் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழல்கள் இடம்பெற்று வருகின்றமை தொடர்பில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் குறித்த பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில்
விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விருக்கின்றனர்.