சர்வதேச நீதியை பெற்றுதாருங்கள்..! இல்லையேல் எங்களை கொன்றுவிடுங்கள் அதுவும் முடியாவிட்டால் நாங்களே சாகிறோம், உறவுகள் உருக்கம்..
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் யாழ்.நாவலர் வீதியில் உள்ள ஐ.நா அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியிருக்கின்றனர்.
இன்று காலை 9 மணி தொடக்கம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை நடத்தியிருந்ததுடன், மகஜர் ஒன்றையும் ஐ.நாவுக்கு கையளித்திருக்கின்றனர்.
போராட்டத்தின்போது கதறி அழுத காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ”சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட்டு உண்மைகளை வெளிப்படுத்துங்கள் எனவும், உண்மைகளை கண்டறிந்து சொல்லாவிட்டால் நாங்களே தற்கொலை செய்வோம்.
இல்லையென்றால் எங்கள் மீது குண்டுகளை போட்டு கொலை செய்துவிடுங்கள்” என கதறி அழுதனர். இன்றைய போராட்டத்தில் கொரோனா பரவல் காரணமாக குறைந்தளவு மக்களே கலந்துகொண்டிருந்தனர்.
மேலும் மாகாணசபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கலந்துகொண்டு ஆதரவளித்தார். ஆர்ப்பாட்டம் நிறைவடைந்த பின்னர் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர்.