நடுக்கடலில் மூழ்கிய படகு: 8 மீனவர்களை காணவில்லை!! -4 பேரின் சடலங்கள் மீட்பு: ஏனையவர்களை தேடும் நடவடிக்கை தொடர்கிறது-

ஆசிரியர் - Editor II

நடுக்கடலில் படகு மூழ்கியதில் 6 மீனவர்கள் பலியானார்கள். அதில் ஏற்கனவே 2 மீனவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. தற்போது மேலும் 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு இருக்கிறது. 

தட்சிண கன்னடா மாவட்டம் போலார் பகுதியைச் சேர்ந்த 22 மீனவர்கள் அரபிக்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் மங்களூரு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். 

நடுக்கடலுக்கு சென்று மீன்களை பிடித்த அவர்கள் கடந்த முதலாம் திகதி பந்தர் துறைமுகத்தை வந்தடைந்திருக்க வேண்டும். இருப்பினும் மீனவர்கள் கரை வந்து சேரவில்லை.

இதுபற்றி அறிந்த மற்ற மீனவர்கள் தங்களது விசைப்படகில் கடலுக்குள் என்று பார்த்தனர். அப்போது பந்தர் துறைமுகத்தில் இருந்து சில கடல் மைல் தொலைவில் அந்த மீனவர்களின் வலை மட்டும் இருந்தது. மேலும் அங்கு ஒரு சிறிய படகில் 16 மீனவர்கள் இருந்தனர்.

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் காற்றின் சீற்றத்தால் மீன் பாரம் தாங்காமல் அந்த விசைப்படகு கடலில் மூழ்கி விட்டதும், 6 மீனவர்கள் கடலில் மூழ்கி இறந்துவிட்டதும் தெரியவந்தது. இதையடுத்து கடலோர காவல் படையினர், மீனவர்கள் மற்றும் பந்தர், மங்களூரு துறைமுக அதிகாரிகள் மீட்பு படகுகளில் கடலுக்கு சென்று பலியான மீனவர்களின் உடல்களையும், அவர்கள் சென்ற விசைப்படகையும் தேடினர்.

இதில் முதலில் பாண்டுரங்க சுவர்ணா மற்றும் பிரீத்தம் ஆகிய 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மற்ற 4 பேரின் உடல்கள் கிடைக்கவில்லை. இரவு நேரம் ஆனதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் நேற்று காலையில் மீண்டும் தேடுதல் பணி தொடர்ந்து நடந்தது. அப்போது மேலும் 2 மீனவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. அவர்களில் ஒருவர் அன்சார் ஆவார். மற்றொருவரின் பெயர் உடனடியாக தெரியவில்லை. இதையடுத்து அவர்கள் 2 பேரின் உடல்களையும் கடலோர பாதுகாப்பு படையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மங்களூருவில் உள்ள அரசு வென்லாக் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் 2 பேரின் உடல்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.