புரட்டிப்போட்ட “புரவி” ஒருவர் பலி, 3 பேரை காணவில்லை, நுாற்றுக்கணக்கான வீடுகள் சேதம்..! யாழ்ப்பாணத்தில் மட்டும் 720 குடும்பங்கள் இருப்பிடங்களை இழந்தனர்..
“புரவி” புயல் போிடர் காரணமாக வடமாகாணம் பெரும் பாதிப்பை சந்தித்திருக்கின்றது. நுாற்றுக்கணக்கான வீடுகள் பூரணமாகவும், பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதுடன், பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் தமது இருப்பிடங்களை இழந்திருக்கின்றனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடி நிவாரண உதவிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் வெள்ளம் வடிந்தோட கூடிய இடங்களில் தேங்கி நிற்கும் வெள்ள நீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் மற்றும் தன்னார்வல தொண்டர்கள் மேற்கொண்டிருக்கின்றனர்.
மேலும் இருப்பிடங்களை இழந்த நிலையில் வடக்கில் சுமார் 50 ற்கும் மேற்பட்ட இடைத்தங்கல் நிலையங்களில் மக்கள் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர். மக்களுக்கான உலர் உணவு மற்றும் சமைத்த உணவு குடிநீர் ஆகியன தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றது.
யாழ்ப்பாணம்
யாழ்.மாவட்டத்தில் 4605 குடும்பங்களை சேர்ந்த 15643 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 2605 பேர் நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டிருப்பதாக யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன் கூறியுள்ளார்.
மாவட்டத்தில் தற்போது 21 நலன்புரி நிலையங்கள் அமைக்கப்பட்டு 720 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 605 நபர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 16 வீடுகள் முழுமையாகவும், ஆயிரத்து 256 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளன.
சங்கானை பிரதேச செயலக பிரிவில் நேற்றையதினம் கடலுக்கு சென்ற மீனவர் ஒருவர் காணாமற்போயுள்ளார். இடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அத்தியாவசிய தேவைகள் மற்றும் உணவுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
தொண்டைமனாறு தடுப்பு அணையின் 8 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. எனினும் கடல் மட்டம் உயர்ந்துள்ளதால் வெள்ளநீர் வடிந்து ஓடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இன்று பிற்பகல் வரை மழை தொடருமாக இருந்தால் வெள்ள நிலமை அதிகரிக்கும் என்றார்.
இதேவேளை, தென்மராட்சி பிரதேசத்தில் வெள்ளநீர் உட்புகுந்துள்ளதால் மட்டுவில்,கைதடி,நாவற்குழி, சாவகச்சேரி, கொடிகாமம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். அவர்கள் நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு வீசிய கடுங்காற்றுக் காரணமாக தென்மராட்சி மீசாலை வடக்கு பகுதியில் 300 ஆண்டு பழமையான பாலை மரம் அடியோடு சாய்ந்து ஆலயம் ஒன்றின் மீது வீழ்ந்துள்ளது. மேலும், மீசாலை மேற்குப் பகுதியில் தென்னை மரம் ஒன்று மின்சார கம்பிகள் மீது வீழ்ந்ததால், மின் தடைப்பட்டிருந்தது.
கொடிகாமம் தவசிக்குளத்தில் வலிப்பு காரணமாக வெள்ளத்துக்குள் மகாலிங்கம் நிதீஸ் (வயது -29) என்பவர் மீட்கப்பட்டு சாவகச்சேரி வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதும் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் சாவகச்சேரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
என்று கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
மன்னார்
மன்னார் மாவட்டத்தின் நானாட்டான், மாந்தை மேற்கு, முசலி, மடு மற்றும் மன்னார் நகரம் ஆகிய பிரதேசச் செயலாளர் பிரிவுகளில் 2,236 குடும்பங்களைச் சேர்ந்த 7, 749 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அத்துடன் இங்கு 6 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன்,
1,778 குடும்பங்களைச் சேர்ந்த 6,795 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி
கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அங்கு 9 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
முல்லைத்தீவு
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், துணுக்காய், மாந்தை கிழக்கு மற்றும் மணலாறு பிரதேச செயலாளர் பிரிவுகளில் 405 குடும்பங்களைச் சேர்ந்த, 1,149 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இங்கு ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், 130 குடும்பங்களைச் சேர்ந்த 444 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா
வவுனியா மாவட்டத்தில் வவுனியா, வவுனியா வடக்கு, வவுனியா தெற்கு மற்றும் வெங்கலச்செட்டிக்குளம் பிரதேச செயலாளர் பிரிவுகளில் 74 குடும்பங்களைச் சேர்ந்த 236 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இங்கு ஐந்து வீடுகள் சேதமடைந்துள்ளது.