வங்க கடலில் காற்றழுத்தம் இன்று புயலாக மாறுகிறது!! -இலங்கை, இந்தியாவிற்கு சிவப்பு எச்சரிக்கை-
தெற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று செவ்வாய்க்கிழமை புயலாக மாறும் என்றும், இது நாளை புதன்கிழமை இலங்கையை கடந்து குமரி கடலில் நிலை கொள்ளும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இது குறித்த வானிலை ஆய்வு மையம் மேலும் தெரிவிக்கையில்:-
தெற்கு அந்தமான், அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்ககடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது நேற்று காலை தாழ்வு மண்டலமாக மாற்றமடைந்துள்ளது.
இது மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், இன்று காலை புயலாகவும் வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் நாளை மாலை இலங்கையை கடந்து குமரி கடல் பகுதியில் நிலை கொள்ளும். இது குமரி கடல் பகுதியில் 2 நாட்கள் நிற்பதற்கான வாய்ப்பும் இருக்கிறது.
இதன் போது கடலோர மாவட்டங்களில் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.