மாவீரர் நாள் நினைவேந்தல் நடத்தபோகிறீர்களா..? வீடு புகுந்து இராணுவம், புலனாய்வாளர்கள் அச்சுறுத்தல்..
கோப்பு படம்..
முல்லைத்தீவு - அளம்பில் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கு 26.11.2020 இன்று சென்ற இராணுவத்தினர் மற்றும் புலனாய்வாளர்கள், அங்கிருந்தவர்களை அச்சுறுத்திச் சென்றுள்ளனர்.
முல்லைத்தீவு நீதிமன்றினால் மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு தடைவிதிக்கப்பட்ட நபர் ஒருவர் நேற்று இரவு குறித்த வீட்டிற்கு சென்றிருந்த நிலையிலேயே இவ்வாறு இராணுவம் மற்றும் புலனாய்வாளர்கள் அங்கு சென்று அச்சுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றினால் மாவீரர்நாள் நினைவேந்தலுக்கு தடைவிதிக்கப்பட்ட 46பேரில் ஒருவரான பேதுறுப்பிள்ளை ஜெபநேசன் என்பவர் மட்டக்களப்பில் வசித்துவருகின்றார்.
இந் நிலையில் நேற்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றால் மாவீரர்நாள் நினைவேந்தல் தொடர்பான வழக்கின் கட்டளை அறிவிக்கப்படவிருந்தநிலையில், அன்று மாவீரர்நாளுக்குத் தடைவிதிக்கப்பட்டோர் சார்பில் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து அவர் முல்லைத்தீவு -அளம்பில் அந்தோனியார் கோவிலுக்கு அருகாமையில் அமைந்துள்ள நண்பர் ஒருவரின் வீட்டில் நேற்று இரவு உணவருந்திவிட்டு மட்டக்களப்பிற்குச் சென்றிருந்தார்.
இந் நிலையில் இன்று காலை 08.00மணியளவில், அளம்பில் பகுதியில் பேதுறுப்பிள்ளை ஜெபநேசன் என்னும் நபர் உணவருந்திய நண்பர் வீட்டிற்குச் சென்ற புலனாய்வாளர்கள் மன்றும், இராணுவத்தினர் அவர் வருகை தந்ததன் நோக்கம் குறித்து விசாரணை செய்ததுடன்,
அளம்பில் துயிலும்இல்ல நினைவேந்தலுக்கு குறித்த ஜெபநேசன் என்னும் நபர் தலைமை வகிக்கின்றாரா எனவும், கடுமையான தொனியில் குறித்த வீட்டில்இருந்தவர்களை மிரட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை குறித்த ஜெபநேசன் என்னும் நபர் அங்கு வருகைதந்தால் அருகிலுள்ள இராணுவமுகாமில் தெரிவிக்குமாறும் கூறிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இது தொடர்பில் பேதுறுப்பிள்ளை ஜெபநேசன் கருத்து தெரிவிக்கையில்,
தாம் நீதிமன்றின் கட்டளையினை ஏற்றுக்கொண்டு அமைதியான முறையில் தமது அன்றாடக் கடமைகளில் ஈடுபட்டிருக்கும்போது இராணுவம் மற்றும் புலனாய்வளர்களின் குறித்த அச்சுறுத்தல் செயற்பாடு
தன்னை அச்சத்திற்குள்ளாக்கியுள்ளதாகவும், தனக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் இராணுவமும், புலனாய்வாளர்களுமே பொறுப்புக்கூறவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.