அரசு மருத்துவ பணியாளர்கள் 60 பேருக்கு கொரோனா!! -3 தாதியர்கள் இதுவரை மரணம்-

ஆசிரியர் - Editor II

இந்தியாவின் குஜராத்தில் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் மருத்துவ பணியாளர்கள் 60 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக உள்ள குஜராத்தின் ஆமதாபாத் நகரில், கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வந்த நிலையில், கடந்த ஒருவாரமாக தற்போது மீண்டும் தொற்று வேகமெடுத்து உள்ளது. 

ஆமதாபாத்தின் அஸ்வாரா பகுதியில் உள்ள அரசு வைத்தியசாலையில் தான் அதிகளவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், அந்த வைத்தியசாலையில் பணிபுரிந்து வரும் மருத்துவ பணியாளர்கள் 60 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து பலர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளதுடன், மற்றவர்கள் தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர். 

கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவ தொடங்கியதில் இருந்து இதுவரை குறித்த வைத்தியசாலையில் வைத்தியர்கள், தாதியர்கள் உள்பட 430 மருத்துவ பணியாளர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டதுடன், ஒரு தாதியர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.