தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய விடயத்தை யாழ்.மேல் நீதிமன்றில் விசாரிக்க முடியாது..! மாவீரர் நாளுக்கு தடை விதிக்ககூடாது பேராணை மனு மீதான தீர்ப்பு வெளியானது..
மாவீரர் நாள் நினைவேந்தலை கூட்டாக பொது இடங்களில் சேர்ந்து நின்று நடாத்துவது தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய விடயம் என்பதால் குறித்த வழக்கை விசாரிப்பதற்கு யாழ்.மேல் நீதிமன்றுக்கு நியாயாதிக்கம் இல்லை. என மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தையோ அல்லது தனிமைப்படுத்தல் சட்ட விதிகளையோ காரணம் காண்பித்து எதிர்வரும் நவம்பர் 25 ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதிவரை நிகழவிருக்கும் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடை செய்ய முயற்சிக் கூடாது என்று வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர்
மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோருக்கு கட்டளை வழங்குமாறு கோரி யாழ்.மேல் நீதிமன்றில் தலையீட்டு நீதிப் பேராணை மனுக்கள் மீதான வழக்கு விசாரணை இன்று நடைபெற்றுள்ள நிலையில் அதன் தீர்ப்பு வெளியாகியுள்ளது.
குறித்த தீர்ப்புக் குறித்து நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது, குறித்த ஆட்சேபனையை ஏற்றுக்கொண்டு எழுத்தாணை தொடர்பில் மாகாண நீதிமன்றுக்கு நியாயாதிக்கம் இல்லை என்று தீர்ப்பளித்து
எழுத்தாணை மனுக்களை நீதிபதி நிராகரித்துள்ளார். இது தேசிய பாதுகாப்போடு சம்பந்தப்பட்ட விடயம் என்றும், அது ஒதுக்கிய நிரலிலே உள்ள ஒரு விடயம் என்றும், மாகாணத்துக்குரிய ஒரு விடயமாக அதைக் கருதமுடியாது என்றும் நீதிபதி தன்னுடைய தீர்ப்பிலே குறிப்பிட்டிருக்கின்றார்.
மனுதாரர்கள் தனியாக தங்களுடைய உறவினர்களுக்கு நினைவேந்தல் செய்வதை எவரும் தடுக்க முடியாது என்பதை ஏற்றுக்கொள்வதாகவும் கூட்டாகச் சேர்ந்து மாவீரர் நினைவேந்தல் என்ற அடிப்படையிலே அது செய்யப்படுவது தேசியப் பாதுகாப்போடு சம்பந்தப்படுவது என்பதை
தான் எற்றுக்கொள்வதாகவும் தெரிவித்திருக்கின்றார். மனுதாரர்கள் தாங்கள் தங்களுடைய உறவினர்களுக்கான நினைவேந்தலைச் செய்யலாம் ஆனால் கூட்டாக பொது இடத்திலே கூட்டாக சேர்ந்து நின்று அதை முன்னெடுப்பது தேசிய பாதுகாப்போடு
சம்பந்தப்பட்ட விடயம் என்பதினாலே அதனை விசாரிப்பதற்கு இந்த நீதிமன்றத்துக்கு நியாயாதிக்கம் இல்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.