தமிழீழ மாவீரர் நாள் நினைவேந்தல்களுக்கு தடை உத்தரவு பெறுவதற்கு பொலிஸார் தீவிர முயற்சி..! யாழ்ப்பாணத்தில் இரு மனுக்கள் ஒத்திவைப்பு, வவுனியா, மன்னாரில் தடை..

ஆசிரியர் - Editor I

மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு தடைகோரி பருத்துறை நீதிமன்றம் மற்றும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது. 

பருத்துறை நீதிவான் நீதிமன்றில் இலங்கை குற்றவியல் நடபடி சட்டக்கோவை 106ஆம் பிரிவின் கீழ் பொதுத் தொல்லையின் கீழ் இந்த விண்ணப்பம் பருத்தித்துறை, வல்வெட்டித்துறை மற்றும் நெல்லியடி 

ஆகிய 3 பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளால் தாக்கல் செய்யப்பட்டது. இந்த விண்ணப்பம் இன்று பருத்தித்துறை நீதிமன்ற நீதிவான் காயத்திரி சைலவன் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

எதிர் மனுதாரர்களாக நினைவேந்தலை நடத்தும் ஒவ்வோருவர் உள்பட சிலரது பெயர்கள் குறிப்பிடப்பட்டன. இந்த மனு அழைக்கப்பட்டபோது 

பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் சட்டத்தரணி விஸ்வலிங்கம் திருக்குமரன், சந்திரசேகரம், செலஸ்ரின் உள்ளிட்ட 6இற்கு மேற்பட்ட சட்டத்தரணிகள் தோன்றினர்.

பொலிஸாரின் விண்ணப்பதில் உள்ள விடயம் தொடர்பில் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நாளை அழைக்கப்படவுள்ள நிலையில் பொலிஸார் இந்த விண்ணப்பத்தை தாக்கல் செய்துள்ளனர். 

அதனால் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யபட்ட எழுத்தாணை மனுவின் முடிவை வைத்து இந்த விண்ணப்பதை விசாரணைக்கு எடுக்கவேண்டும் என்று சட்டத்தரணிகள் மன்றுரைத்தனர்.

அதனால் வழக்கை வரும் 23ஆம் திகதி திங்கட்கிழமை வரை ஒத்திவைத்த பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம், பிரதிவாதிகளுக்கு அறிவித்தலை சேர்ப்பிக்க உத்தரவிட்டது.

இதேபோல் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம், கீரிமலை நகுலேஷ்வரம் ஆலயம் அடங்கலாக காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்குள் மாவீரர் நாள் நினைவேந்தல்களுக்கு தடைவிதிக்ககோரி

காங்கேசன்துறை பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட மனு நாளை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது. 

இலங்கை குற்றவியல் நடைமுறை சட்டக்கோவை 106ஆம் பிரிவின் கீழ் இந்த விண்ணப்பம் செய்யப்பட்டது. இந்த விண்ணப்பம் இன்று நீதிமன்றால் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

எதிர் மனுதாரர்களாக வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம், கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம் ஆகியவற்றின் நிர்வாகம், பூசகர் ஆகியோர் உள்பட்டோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இந்த மனு அழைக்கப்பட்டபோது மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையிலான 6 இற்கு மேற்பட்ட சட்டத்தரணிகள் தோன்றினர்.

பொலிஸாரின் விண்ணப்பதில் உள்ள விடயம் தொடர்பில் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நாளை அழைக்கப்படவுள்ள நிலையில் பொலிஸார் இந்த விண்ணப்பத்தை தாக்கல் செய்துள்ளனர். 

அதனால் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யபட்ட எழுத்தாணை மனுவின் முடிவை வைத்து இந்த விண்ணப்பதை விசாரணைக்கு எடுக்கவேண்டும் என்று சட்டத்தரணி வி.மணிவண்ணன் மன்றுரைத்தார்.

அதனால் வழக்கை நாளை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைத்த மல்லாகம் நீதிவான் நீதிமன்றம், பிரதிவாதிகளுக்கு அறிவித்தலை சேர்ப்பிக்க உத்தரவிட்டது.

மேலும் வவுனியா மற்றும் மன்னார் நீதிவான் நீதிமன்றங்களில் மாவீரர் நாள் நினைவேந்தல்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தொிவித்துள்ளனர். 

இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கம் தீவிரவாத அமைப்பாக தடை செய்யப்பட்டுள்ளது. தீவிரவாத அமைப்பைக் கொண்டாடுவது அல்லது அதற்கு ஆதரவை வெளிப்படுத்தும் நிகழ்வுகளை தனியாகவோ, 

குழுவாகவோ ஒழுங்கமைப்பதும், பங்கேற்பதும், சட்டத்துக்குப் புறம்பானதாகும். மாவீரர் நாள் என்பது, விடுதலைப் புலிகளால் கடைப்பிடிக்கப்பட்ட மரபுகளில் ஒன்று. 

புலிகள் இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக இத்தகைய நிகழ்வுகளை நடத்த அனுமதிக்கப்படாது.

என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு