யாழ்.போதனா வைத்தியசாலையில் நோயாளிகளை பார்வையிட வருவோருக்கு இறுக்கமான கட்டுப்பாடு..! பணிப்பாளர் விடுத்துள்ள அறிவிப்பு..
யாழ்.போதனா வைத்தியசாலையில் நோயாளர்களை பார்வையிடுவதற்காக பாஸ் நடைமுறை இறுக்கமாக கடைப்பிடிக்கப்படும் நிலையில் நோயாளர்களை பார்வையிட வருவோர் அதனை பின்பற்றுமாறு யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார்.
வைத்தியசாலையில் பாஸ் இல்லாமல் நோயாளர்களைப் பார்வையிட வந்தோர் வைத்தியசாலைக்கு வெளியில் பல மணிநேரம் கால்கடுக்க காத்து நின்ற சம்பவம் 15/11/2020 ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றுள்ளது இது தொடர்பாக நோயாளரை பார்க்க வந்தவர்கள் கருத்து தெரிவிக்கையில்
முன்பு நோயாளர்களை பார்வையிட பாஸ் வைத்திருப்போரை அனுமதித்த பின்னர் பாஸ் இல்லாதவர்களையும் குறிப்பிடப்பட்ட நேரத்திற்கு பின்னர் அனுமதிக்கும் வழமை காணப்பட்டது. தற்போது அந்த நடைமுறையில்லை என தெரிவிக்கும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள்.
தூர இடங்களிலிருந்து நோயாளர்களை பார்க்க வருபவர்கள் நோயாளருடன் தங்கியிருந்த உறவினர் வீடு சென்றதால் தம்மால் உரிய அனுமதி அட்டையை (பாஸ்) பெற முடியாமல் போய் விட்டது எனவும் இதேவேளை தூர இடங்களில் இருந்து வரும் தங்களை பாதுகாப்பு கடமையில் உள்ள சில ஊழியர்கள்
மரியாதை இன்றி தரக்குறைவாக பேசுவதாகவும் தெரிவித்தனர். இவ்விடயம் தொடர்பில் வைத்தியசாலை பணிப்பாளர் கருத்து தெரிவிக்கும்போது கொரோணா சூழ்நிலை காரணமாக நோயாளர்களைப் பார்வையிடுவோரை மட்டுப்படுத்துவதற்காக
பாஸ் நடைமுறை இறுக்கமாக பார்க்கப்படுவதாகவும் இதற்கு நோயாளர்களை பார்வையிட வருவோர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.