SuperTopAds

யாழ்.கல்வியங்காட்டில் 25 வயதான இளைஞனுக்கு கொரோனா தொற்று உறுதி..! கடந்த 1ம் திகதி யாழ்ப்பாணம் வந்தவர், மாகாண சுகாதார பணிப்பாளர் தகவல்..

ஆசிரியர் - Editor I

யாழ்.கல்வியங்காடு பகுதியை சேர்ந்த 25 வயதான இளைஞன் ஒருவனுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். 

பேலியகொட மீன் சந்தைக்கு மீன் கொண்டு சென்ற நிலையில் சந்தை பூட்டப்பட்டதால் மட்டக்களப்பு தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு தங்க வைக்கப்பட்டிருந்தார். 

அங்கு 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அவரது மாதிரி பி.சி.ஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டபோது அவருக்கு தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் 

கடந்த 1ம் திகதி யாழ்ப்பாணம் திரும்பிய குறித்த இளைஞன் நல்லூர் மருத்துவ சுகாதார அதிகாரியின் அறிவுறுத்தலில் அவர் தொடர்ந்து சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.

அவரிடம் பெறப்பட்ட மாதிரியின் அடிப்படையில் இன்று முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறிப்பட்டுள்ளது.

சுமார் ஒரு மாதங்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்ட அவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

இந்த நிலையில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த மேலும் மூவருக்கு நாளை பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது.