கிளிநொச்சி - ஜெயபுரம் கிராமம் தற்காலிகமாக முடக்கப்பட்டது..! உள்நுழையவும், வெளி செல்லவும் தடை, கொரோனா தொற்றுக்குள்ளானவர் நடமாடியதாக தகவல்..
கிளிநொச்சி - பூநகரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜெயபுரம் கிராமத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்ட நிலையில் ஜெயபுரம் கிராமம் தற்காலிகமாக முடக்கப்படுவதாக பிரதேச மக்களுக்கு ஒலி பெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பூநகரி பிரதேச செயலருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, ஜெயபுரம் கிராமம் தற்காலிகமாக நாளை மாலைவரை முடக்கப்பட்டிருக்கின்றது. தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புடையவர்களை அடையாளம் காண்பதற்கான தேவை உள்ளதாக சுகாதார பிரிவு கூறியுள்ளது.
இது தற்காலிகமான முடக்கம் என்றார். இதேவேளை தொற்றுக்குள்ளான நபர் சமூக மட்டத்தில் நடமாடியுள்ளதாகவும், இந்நிலையில் அவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தவும் பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அறிய முடிகிறது.
மேலும் ஜெயபுரம் கிராமம் தற்காலிகமாக முடக்கப்படுவதாக ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு அறிவிக்கப்பட்டிருப்பதுடன் வீதிகளில் சோதனை சாவடிகள் போடப்பட்டு உள்நுழையவும், வெளியே செல்லவும் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.