SuperTopAds

நிதி குற்ற புலனாய்வு பிரிவின் விசாரணை வளையத்திற்குள் சிக்கியுள்ள வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் உள்ளிட்ட 12 முக்கிய அதிகாரிகள்..!

ஆசிரியர் - Editor I

வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடி தொடர்பாக மாகாண கல்வியமைச்சின் செயலாளர், மாகாண பணிப்பாளர், கண்காளர், வலயகல்வி பணிப்பாளர் என 12 பேர் நிதி குற்றப்புலனாய்வு பிரிவின் விசாரணை வளையத்திற்குள் சிக்கியிருக்கின்றார்கள். 

கல்வி வலயத்தில் பணியாற்றிய முகாமைத்துவ உதவியாளர் ஒருவர் 21 மில்லியன் ரூபா மோசடியில் ஈடுபட்டமை வெளித் தெரியவந்ததையடுத்து நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதே நேரம் மாகாணப் பிரதம செயலாளர் ஐவர் அடங்கிய விசாரணைக் குழு ஒன்றையும் நியமித்தார்.

இதனையடுத்து மாகாண ரீதியில் விசாரணை இடம்பெறும் அதேநேரம் நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் , பணிப்பாளர் , கணக்காளர் ஆகியோருடன் வலயக் கல்விப் பணிப்பாளர், கணக்காளர், கணக்கிற்கு பொறுப்பான உத்தியோகத்தர்கள் என மொத்தம் 12 பேர் அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். 

இவ்வாறு இடம்பெற்ற விசாரணைகள் நேற்று முழுநாளும் இடம்பெற்றது. இவ்வாறு நேற்றைய தினம் இடம்பெற்ற விசாரணைகள் நிறைவு பெறாத நிலையில் இன்றைய தினமும் முன்னெடுப்பதற்காக அனைவரும் கொழும்பிலேயே மறிக்கப்பட்டுள்ளனர். இதனால் இன்றைய தினமும் விசாரணைகள் இடம்பெறவுள்ளது. 

இன்றைய விசாரணைகளின் பின்பே இதன் இறுதி நிலவரங்கள் தெரியவரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.