யாழ்.உடுவிலில் கொரோனா தொற்றுக்குள்ளான 9வயதான சிறுமியுடன் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்தவர்கள் உங்களை அடையாளப்படுத்துங்கள்..! பணிப்பாளர் கோரிக்கை..

ஆசிரியர் - Editor I

யாழ்.உடுவிலில் கொரோனா தொற்றுக்குள்ளான சிறுமி கொழும்பு - கொட்டாஞ்சேனையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு தனியார் பேருந்தில் பயணித்துள்ள நிலையில் குறித்த பேருந்தில் பயணித்த 18 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறியிருக்கும் மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன், 

மிகுதி பயணிகளை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் தொடர்புபட்டவர்கள் தங்களை அடையாளப்படுத்துமாறும் பணிப்பாளர் கோரிக்கை விடுத்திருக்கின்றார். 

உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தொற்றுக்குள்ளான சிறுமி தனது தாய் மற்றும் இரு சகோதரர்களுடன் கொட்டாஞ்சேனையில் உள்ள தந்தையை சந்திக்க கடந்த 25ம் திகதி சென்று மீண்டும் 29ம் திகதி தனியார் பேருந்தில் யாழ்ப்பாணம் திரும்பியுள்ளனர். 

இந்நிலையில் குறித்த தனியார் பெருந்தில் 43 பேர் பயணித்துள்ள நிலையில் 18 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். மிகுதியானவர்களை தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே குறித்த பேருந்தில் பயணம் செய்தவர்கள் தங்களை அடையள்படுத்தவேண்டும். 

மேலும் வடக்கில் தொற்றுக்குள்ளான பலர் கொழும்பில் இருந்து பொது போக்குவரத்தை பயன்படுத்தியுள்ள நிலையில் பொது போக்குவரத்தை பயன்படுத்தும் மக்கள் தாம் பயணிக்கும் பேருந்தின் இலக்கம் மற்றும் விபரங்களை அறிந்திருக்கவேண்டும். 

இது குறித்து இன்று நடைபெற்ற ஆளுநர் தலமையிலான கலந்துரையாடலிலும் பேசப்பட்டு பொது போக்குவரத்து வாகனங்களின் உட்புறத்தில் வாகனம் குறித்த முழுமையான விபரங்களை காட்சிப்படுத்துவதென தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பணிப்பாளர் கூறியுள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு