SuperTopAds

சுதந்திரக் கிண்ண மும்முனை இ 20 கிரிக்கெட்: இன்று பங்களாதேஷ் – இந்தியா ‍மோதல்

ஆசிரியர் - Admin
சுதந்திரக் கிண்ண மும்முனை இ 20 கிரிக்கெட்: இன்று பங்களாதேஷ் – இந்தியா ‍மோதல்

இலங்கைக்கு எதிரான சுதந்திரக் கிண்ண ஆரம்பப் போட்டியில் தோல்வி அடைந்த இந்தியா, தனது இரண்டாவது போட்டியில் எதிர்பாராத முடிவுகளை ஏற்படுத்தவல்ல பங்களாதேஷை இன்று சந்திக்கவுள்ளது..

இலங்கையுடனான மூவகை கிரிக்கெட் போட்டிகளிலும் கடந்த ஆறு மாதங்களில் வெற்றிபெற்று வந்த இந்தியா, செவ்வாயன்று நடைபெற்ற போட்டியில் குசல் ஜனித் பெரேராவின் அதிரடியில் ஆடிப்போய் தோல்வியைத் தழுவியது.

சுதந்திரக் கிண்ண மும்முனைத் தொடரில் ஆதிக்கம் செலுத்தவல்ல அணி என எதிர்பார்கப்பட்ட இந்தியா, அந்தத் தோல்வியிலிருந்து உடனடியாக மீண்டெழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளதுடன் பலத்த அழுத்தத்துக்கு மத்தியில் இன்றைய போட்டியில் பங்களாதேஷை எதிர்கொள்ளவுள்ளது.

இலங்கைக்கு எதிரான போட்டியில் 174 ஓட்டங்களைத் தக்கவைப்பதற்கான முயற்சியில் இறங்கிய இந்திய அணிக்கு அனுபவம் குன்றிய பந்துவீச்சாளர்களால் எதுவும் செய்யமுடியாமல் போனது. இந்தியாவின் ஒரே ஒரு முன்னணி சுழல்பந்துவீச்சாளரான யுஸ்வேந்த்ர சஹால் 2 விக்கெட்களைக் கைப்பற்றியபோதிலும் குசலின் அதிரடியில் அவரும் திணறிப்போனார்.

எவ்வாறாயினும் பங்களாதேஷுக்கு எதிரான இன்றைய போட்டியில் தனது இளம் வீரர்கள் சாதிப்பார்கள் என இந்திய அணித் தலைவர் ரோஹித் ஷர்மா நம்பிக்கை வெளியிட்டார்.

‘‘எமது பந்துவீச்சாளர்கள் தங்களாலான சகல முயற்சிகளையும் எடுத்தனர். ஆனால் சில சந்தர்ப்பங்களில் நாங்கள் எதிர்பார்ப்பது போன்று எதுவும் நமக்கு சாதகமாக அமைந்துவிடுவதில்லை. எம்மிடம் அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருக்கின்றனர் என நான் கருதினேன். அவர்கள் இத்தகைய போட்டிகளுக்கு புதியவர்கள் என்பதை ஒப்புக்கொள்கின்றேன். ஆனால் அவர்கள் இதற்கு முன்னர் தங்களது சிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்தியவர்கள். இன்று நடைபெறவுள்ள போட்டியை நாங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்கொள்ளவுள்ளோம்’’ என்றார் ரோஹித் ஷர்மா.

‘‘எமது துடுப்பாட்ட வரிசையில் திறமைசாலிகள் தாராளமாக இருக்கின்றனர். அத்துடன் சில சகலதுறை வீரர்களும் இருக்கின்றனர். வெற்றிக்காக கடுமையாக போராடுவோம்’’ எனவும் அவர் குறிப்பிட்டார்.

பொதுவாக மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் எல்லா அணிகளுக்கும் பங்களாதேஷ் சிம்ம சொப்பணமாகத் தான் அண்மைக்காலமாக காட்சி கொடுகின்றது. அது இலங்கையில் தொடரலாம் அல்லது தொடராமலும் விடலாம்.

வழமையான அணித் தலைவர் ஷக்கிப் அல் ஹசன் உபாதையிலிருந்து பூரண குணமடையாததால் பங்களாதேஷ் அணியின் தலைமைப் பொறுப்பு மஹ்முதுல்லாஹ்விடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

‘‘ஷக்கிப் அல் ஹசன் போன்ற சிறந்த தலைவர், சகலதுறை வீரர் அணியில் இல்லாதது பேரிழப்பாகும். அதேவேளை, அணியில் இடம்பெறும் ஏனைய வீரர்கள் தங்களது ஆற்றல்களை வெளிப்படுத்த இது ஒரு சிறந்த சந்தர்ப்பமாகும். இந்த மும்முனைத் தொடரை சாதிக்கும் குறிக்கோளுடன் எதிர்கொள்ளவுள்ளோம்’’ என மஹ்முதுல்லாஹ் தெரிவித்தார்.

இலங்கையுடனான டெஸ்ட் தொடர் மற்றும் இருபது 20 கிரிக்கெட் தொடர் ஆகியவற்றிலும் மும்முனைத் தொடரிலும் தோல்வி அடைந்த பங்களாதேஷ், மீண்டும் நல்ல நிலையை அடைவேண்டிய கட்டாய நிலையில் இருக்கின்றது.

இதேவேளை, தற்போது தமது அணி சிறந்த நிலையில் இல்லாதபோதிலும் திருப்பங்களை ஏற்படுத்தக்கூடிய நம்பிக்கை இருப்பதாக சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர் தமிம் இக்பால் குறிப்பிட்டார்.

‘‘இலங்கையில் எனக்கு மட்டுமல்ல, எமது முழு அணிக்கும் பலத்த சவால் காத்திருக்கின்றது. அணி என்ற வகையில் தற்போது நாங்கள் சிறந்த நிலையில் இல்லை. துடுப்பாட்ட வீரர்களும் பந்துவீச்சாளர்களும் பிரகாசிப்பதும் பிரகாசிக்காமல் விடுவதும் இயல்பு. கிரிக்கெட் போட்டிகளில் சாதக, பாதக முடிவுகள் கிடைப்பது வழமையான ஒன்றே. எம்மால் எதிர்நீச்சல் போட முடியும் என்ற நம்பிக்கை இருக்கின்றது’’ என தமிம் இக்பால் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் இந்த மும்முனைத் தொடரில் இழப்பதற்கு எதுவுமில்லை என்பதாலும் இந்தியா, இலங்கை போன்று எவ்வித அழுத்தத்தையும் எதிர்கொள்ள வேண்டி இல்லாததாலும் பங்களாதேஷ் துணிச்சலுடன் விளையாடுவது உறுதி. இன்றைய போட்டியில் இந்தியாவுக்கு பங்களாதேஷ் அழுத்தம் கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.